search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். முன் அரசு ஊழியர் மரணம்: மோடி கவனிக்கிறாரா என மம்தா கேள்வி
    X

    ஏ.டி.எம். முன் அரசு ஊழியர் மரணம்: மோடி கவனிக்கிறாரா என மம்தா கேள்வி

    ஏ.டி.எம் மையம் ஒன்றில் வரிசையில் நின்ற மாநில அரசு ஊழியர் மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசம் என கூறியுள்ள மம்தா பானர்ஜி பிரதமர் மோடி இதனை கவனித்துள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் வரிசையில் நின்ற மாநில அரசு ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசம் என கூறியுள்ள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடி இதனை கவனித்துள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    கொல்கத்தாவின் தெற்கே பெஹலா பகுதியில் வசித்து வந்தவர் கல்லோல் ராய்சவுத்ரி (வயது 56).  இவர் வடக்கு வங்காளத்தில் உள்ள கூச்பெகாரில் அரசு பணியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் பஹரியா எக்ஸ்பிரெஸ் ரெயிலில் வந்த அவர் பண்டல் ரெயில் நிலையத்தில் தனது நண்பருடன் வந்திறங்கினார்.  அங்கிருந்து கொல்கத்தா நகருக்கு வேறு ரெயிலில் அவர் செல்ல வேண்டும்.  ஆனால், ரெயில் நிலையம் அருகே இருந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது என அவர் முடிவு செய்துள்ளார்.

    அதன்படி காலை 7.35 மணியளவில் வரிசையில் நின்றுள்ளார்.  20 நிமிடங்கள் கழித்து அவர் மயங்கி விழுந்துள்ளார்.  அதனை தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை அவரை யாரும் கவனிக்கவில்லை.  அதன்பின் ஏ.டி.எம்.மின் பாதுகாப்பு அதிகாரி மருத்துவர் ஒருவரை அழைத்து வந்துள்ளார்.

    ஆனால் சவுத்ரி இறந்து விட்டார் என கூறிய மருத்துவர் அவரது உடலை மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்து செல்லும்படி கூறியுள்ளார்.  இதனை அடுத்து சவுத்ரியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதுபற்றி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துரதிர்ஷ்டவசமான முறையில் மரண எண்ணிக்கை தொடர்கிறது...  இன்று காலை கல்லோல் சவுத்ரி, பண்டல் ரெயில் நிலையத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். முன்பு மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.  அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல்களை மம்தா தெரிவித்துள்ளார்.  மோடி அவர்கள் இதனை கவனிக்கிறாரா? என கேட்டுள்ளார்.  இதே போல் மேற்கு வங்காளத்தின் தெற்கு பர்கானஸ் மாவட்டத்தில் நேற்று பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன் வரிசையில் நின்ற 2 முதியவர்கள் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×