search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருமண செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க கோரும் மனு தள்ளுபடி
    X

    திருமண செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க கோரும் மனு தள்ளுபடி

    திருமண செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள உச்சவரம்பை அதிகரிக்க கோரும் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    திருமண செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள உச்சவரம்பை அதிகரிக்க கோரும் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.

    குறிப்பாக திருமணத்துக்காக மணமகன், மணமகள் வீட்டாரும் இருவரும் திருமணச் செலவுக்கு என அவரவர் வங்கிக் கணக்கில் இருந்து அதிக பட்சமாக ரூ.2½ லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் இப்படி திருமண செலவுகளுக்காக எடுக்கப்பட்ட பணம் எந்த வகையில் யாருக்கு செலவிடப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரேந்தர் சங்வான் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார்.

    அதில், திருமணத்துக்காக வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கும் பணத்துக்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். திருமணத்திற்காக பாரம்பரியமாக பல்வேறு வெகுமதிகள் வழங்கப்பட்டு வருவதால் திருமணச் செலவுக்கான விவரங்களைக் கேட்பது நியாயமற்றது என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, சங்கீதா ஆகியோர் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது பிரேந்தர் சங்வான் மனுவை நீதிபதிகள் இருவரும் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் கூறுகையில், “ரூபாய் நோட்டு செல்லாது என்கிற பிரச்சினையில் எங்கெங்கு தளர்வு அவசியமாகிறதோ அங்கெல்லாம் மத்திய அரசு அதன்படி விதிமுறைகளை தளர்த்தி வருகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டனர்.

    முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், “திருமண செலவுக்கு நிபந்தனைகளை விதிக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் திருமண அழைப்பிதழை அச்சிட்டு வங்கிக்கு சென்று ரூ.2½ லட்சத்தை எடுத்து விடுவார்கள். எனவே இதை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

    Next Story
    ×