search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
    X

    நேபாளம் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

    நேபாளம் நாட்டில் மூன்று நாள் பயணத்தை முடித்து கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாடு திரும்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேபாளத்தில் 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். நேபாள தலைநகரான காத்மாண்டுக்கு கடந்த புதன்கிழமை சென்ற அவருக்கு, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி தலைமையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், நேபாள பிரதமர், துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.

    தனது பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று முன் தினம் பிரணாப் முகர்ஜி, பசுபதிநாதர் ஆலயத்திற்கு சென்றார். அவருக்கு பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, 108 சிறுவர்கள் மந்திரங்கள் ஜெபிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சர்வதேச நல்லுறவு, பொது நிர்வாகம் மற்றும் அரசியலில் நீண்டகால சேவை ஆற்றியது உள்ளிட்ட பிரணாப் முகர்ஜியின் தனித்திறன்களை சிறப்பிக்கும் வகையில் காத்மாண்டு பல்கலைக்கழகம் அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் தனது மூன்று நாள் நேபாள பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தாயகம் திரும்பி உள்ளார்.

    நாடு திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், “இது ஒரு நட்பு நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். இரண்டு இறையான்மை நாடுகளும் தங்களது உறவை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூண்டது என்று தெரிவித்தார்.

    கடந்த 18 ‌ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி தற்போது முதல்முறையாக நேபாளம் சென்றதால் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    Next Story
    ×