search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவாணி அணை: தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி - பினராயி விஜயன்
    X

    சிறுவாணி அணை: தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி - பினராயி விஜயன்

    சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த கேரள அரசு முயற்சி செய்யும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசியதாவது:-

    சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்ட விரோதமானது. மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி. கேரள அரசின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

    நமது மாநில எல்லையில் இந்த அணை கட்டப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை மாநில அரசு அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    அட்டப்பாடி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் 4 ஆயிரத்து 900 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசன வசதிக்காக சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவது ஒன்றே தீர்வு ஆகும். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வல்லுனர் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதித்து உள்ளது.

    அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டு முயற்சி செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காவிரி ஆற்றின் கிளையான பவானிபுழாவின் உப நதி தான் சிறுவாணி. காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×