search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கள்ளச்சாராயம் விற்பதில் மோதல்: பஞ்சாபில் தலித் வாலிபரை சித்ரவதை செய்து கொன்ற கும்பல்
    X

    கள்ளச்சாராயம் விற்பதில் மோதல்: பஞ்சாபில் தலித் வாலிபரை சித்ரவதை செய்து கொன்ற கும்பல்

    பஞ்சாபில் கள்ளச் சாராயம் விற்பதில் ஏற்பட்ட மோதலில் தலித் வாலிபர் கால் துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் கரங்னா கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் இரு பிரிவினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியான தலித் இளைஞர் சுக்செயின்சிங் என்பவர் சில நாட்களுக்கு முன் மாயமானார்.

    அவரை எதிர் கோஷ்டியினர் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கிராமம் முழுவதும் சோதனை நடந்தது. அப்போது பல்பீர்சிங் என்பவரது வீட்டில் சுக்செயின்சிங் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கால் துண்டிக்கப்பட்டு இருந்தது. வேறொரு இடத்தில் இருந்து அந்த காலை போலீசார் மீட்டனர். அவரது மார்பில் இரும்பு கம்பியால் தாக்கியதற்கான காயம் காணப்பட்டது. சுக்செயின்சிங்கை கடத்திய கும்பல் அவரது காலை துண்டித்து சித்ரவதை செய்து படுகொலை செய்து கொன்று இருப்பது தெரியவந்தது.

    கொலையுண்ட சுக்செயின் சிங்குக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு கும்பலை சேர்ந்த சீதாசிங் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு அடிதடியில் இறங்கி மோதிக் கொண்டனர். இதற்கு அவரை பழிதீர்த்து இருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக அந்த கிராம தலைவர் சர்தோல்சிங் என்பவர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்தோல்சிங் பஞ்சாப் முதல்-மந்திரி பதலின் டிரைவர் மகன் ஆவார்.

    இதற்கிடையே குற்றவாளிகளை காப்பாற்ற அகாலிதளம் கட்சி முயற்சிப்பதாகவும் அக்கட்சியின் பல்வீந்தர்சிங் எம்.பி.க்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலையாளிகளை கைது செய்யாமல் இருக்க போலீசுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்து இருப்பதாக கொலையுண்ட வாலிபரின் தாய் கரம்ஜீத்கவுர் புகார் கூறினார்.

    இதேபோல் அகாலிதளம் கட்சி மீது காங்கிரசும் குற்றம் சாட்டியுள்ளது. கள்ளச் சாராய கும்பலை ஊக்குவிப்பதாகவும், இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில்ஐகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×