search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 22 விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்: சண்டிகாரில் உஷார் நிலை
    X

    டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 22 விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்: சண்டிகாரில் உஷார் நிலை

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் சில முக்கிய விமான நிலையங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவல் உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஆகிய 6 விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் ராணுவ முகாமை தாக்கி சேதப்படுத்தினார்கள். கடந்த மாதம் காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினார்கள்.

    கெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூர் அசார் இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்து காஷ்மீரில் உள்ள இவனது தீவிரவாத அமைப்பின் 7 முகாம்களை இந்திய ராணுவம் சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.

    இந்தியா கொடுத்த பதிலடியில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

    இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதற்காக சுமார் 100 தீவிரவாதிகளை எல்லை தாண்டவ செய்ய தீவிரவாதிகளின் உயர்மட்ட தலைவர்கள் களம் இறக்கி உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக அவர்கள் காஷ்மீருக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் சுட்டு விரட்டியது. இதையடுத்து எல்லை நெடுக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் சில முக்கிய விமான நிலையங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவல் உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூர் ஆகிய 6 விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதை மத்தியத் தொழில் பாதுகாப்புப்படை இயக்குனர் ஜெனரல் ஓ.பி.சிங் உறுதிபடுத்தினார்.

    பெங்களூர், மும்பை ஆகிய இரு விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சிங் தெரிவித்தார். இந்த விமான நிலையங்களில் தீவிரவாதிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை நேற்றிரவு தகவல் தெரிவித்தது. இதையடுத்து இந்த 4 மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மேலும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் கடுமையாக ஆய்வு செய்யப் படுகிறார்கள். எந்த ஒரு சிறு அசம்பாவித சம்பவத்துக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒரு குழு சண்டிகார் நகரை தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் தாக்க ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. அதன் பேரில் சண்டிகார் போலீசாரை உளவுத்துறையினர் உஷார் படுத்தினார்கள்.

    பஞ்சாப்-அரியானா மாநிலங்களுக்கு பொதுவான தலைநகராக இருக்கும் சண்டிகாரை தகர்ப்பதன் மூலம் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்று தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். அதோடு இரு மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக தெரிகிறது.

    மேலும் சண்டிகரில் மேற்கு மண்டல ராணுவ தலைமையகமும் உள்ளது. இதை சீர் குலைக்கும் திட்டத்துடனும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சண்டிகரை குறி வைத்திருப்பது உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து சண்டிகார் நகரம் முழுவதும் நேற்று மாலை முதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்த சண்டிகார் உள்துறை செயலாளர் அனுராக் அகர்வால், “தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

    சண்டிகரில் சந்தேகப்படும்படி நடமாடுபவர்கள் பற்றி உடனுக்குடன் தகவல் கொடுக்கவும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×