search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் வான்வழி தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்: போலீஸ் உஷார் நிலை
    X

    மும்பையில் வான்வழி தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்: போலீஸ் உஷார் நிலை

    மும்பையில் வான் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதால் உஷாராக இருக்குமாறு போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    மும்பை:

    மும்பையில் வான் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதால் உஷாராக இருக்குமாறு போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 164 பேர் பலியானார்கள்.

    அது போன்ற தாக்குதலுக்கு தீவிரவாதிகள் மீண்டும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மர்மபடகு ஊடுருவியது. அதில் இருந்த 9 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மும்பையில் சில நாட்களுக்கு முன் மர்மநபர்கள் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாக பள்ளி மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மும்பையில் 2 நாட்கள் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் யாரும் சிக்கவில்லை. இதனால் சோதனை நிறுத்தப்பட்டது.

    சமீபத்தில் காஷ்மீரில் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் தீவிரவாதிகள் பாகிஸ்தானுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மும்பையில் தரைவழி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் தீவிரவாதிகள் வான்வழி தாக்குதலில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    அதில் அக்டோபர் 2-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம், குறிப்பாக வான்வழியாக தாக்குதல் நடைபெறலாம் என்பதால் முழு உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள் தவிர மாநகராட்சி வார்டு அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×