search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம்: காளஹஸ்தி அருகே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி
    X

    நடத்தையில் சந்தேகம்: காளஹஸ்தி அருகே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி

    காளஹஸ்தி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    காளஹஸ்தி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி (36). இருவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக சுந்தரியின் நடத்தையில் கோபிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், மனைவி மீது அவருக்கு தீவிர கோபம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இரவு சுந்தரி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த கோபி, வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து சுந்தரியின் உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். அதில் அவர் உடல் முழுவதும் கருகி தீக்காயம் அடைந்தார்.

    அப்பகுதியில் இருந்தவர்கள் சுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக வரதய்யபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் சிகிச்சை பெற்ற சுந்தரியிடம், வரதய்யபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக்ஷாவளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். நீதிபதி முன்னிலையில் சுந்தரி போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், எனக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த கணவர் கோபி, மண்எண்ணெயை எடுத்து வந்து என்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறினார்.

    இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வரதய்யபாளையம் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து கோபியை தேடி வந்தனர்.

    வரதய்யபாளையம் அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் ஒரு நிறுவனத்தில் பதுங்கியிருந்த கோபியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×