search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவிடம் எவ்வளவு தண்ணீர் உள்ளது?: காவிரி கண்காணிப்புக் குழு அணைகளில் நேரில் ஆய்வு
    X

    கர்நாடகாவிடம் எவ்வளவு தண்ணீர் உள்ளது?: காவிரி கண்காணிப்புக் குழு அணைகளில் நேரில் ஆய்வு

    கர்நாடகா அணைகளில் தற்போது தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிய நிபுணர் குழு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக “காவிரி நடுவர் மன்றம்“ அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடுவர் மன்றத்தின் உத்தரவு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு காவிரிக் கண்காணிப்புக் குழுவை சுப்ரீம் கோர்ட்டு உருவாக்கியது.

    மத்திய நீர்வளத் துறை அமைச்சக செயலாளர் தலைமையிலான இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில தலைமை செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் இந்த கண்காணிப்புக் குழு கூடி பிரச்சினையை தீர்த்து வைக்கும். இதுவரை 5 தடவை காவிரி கண்காணிப்புக் குழு கூடி பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.

    எனவே தற்போது தமிழகம் - கர்நாடகம் இடையே காணப்படும் தண்ணீர் திறப்பு பிரச்சினை குறித்தும் கண்காணிப்புக் குழுவை நாடும்படி சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்பேரில் தமிழ்நாடும், கர்நாடகாவும் காவிரி கண்காணிப்புக் குழுவில் மனுதாக்கல் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் வரும் 12-ந்தேதி (திங்கட்கிழமை) 6-வது முறையாக கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்படும். இதற்காக கர்நாடகா அணைகளில் தற்போது தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிய நிபுணர் குழு அனுப்பப்படும் என்று தெரிகிறது.

    அந்த குழு நேரில் ஆய்வு செய்த பிறகு தமிழ்நாட்டுக்கு காவிரியில் இன்று தற்காலிக தீர்வாக எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது தெரிய வரும்.
    Next Story
    ×