search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச தேர்தல்: மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடிக்கும் - புதிய கருத்து கணிப்பு தகவல்
    X

    உத்தரபிரதேச தேர்தல்: மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடிக்கும் - புதிய கருத்து கணிப்பு தகவல்

    உத்தரபிரதேச தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக பார்லிமெண்டேரியன் என்ற மாதாந்திர பத்திரிக்கை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேரிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் இந்த கணிப்பை தயாரித்துள்ளது.

    அதில், ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.

    மொத்தம் உள்ள 404 தொகுதிகளில் மாயாவதி கட்சி 169 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. கடந்த தேர்தலில் மாயாவதி கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்போது கூடுதலாக 89 இடம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி 2-வது இடத்தை பிடிக்கும். அந்த கட்சி 135 இடங்களை கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 47 இடங்களையே கைப்பற்றி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காதது அந்த கட்சிக்கு பின்னடைவாக உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்தன. அந்த கட்சிக்கு ஓட்டுபோடுபவர்களிடம் கேட்டபோது 43 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்காக பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுபோட போவதாக கூறினார்கள்.

    அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் மோடி அதிகம் பேசுகிறார். ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. அவரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள்.

    பாரதிய ஜனதாவில் மற்ற தலைவர்களை விட வருண் காந்திக்கு அதிக ஆதரவு இருப்பதும் தெரியவந்தது. யார் சிறந்த முதல்-மந்திரியாக இருப்பார் என்று கேட்ட கேள்விக்கு மாயாவதிக்கு 28 சதவீதம் பேரும், அகிலேஷ் யாதவுக்கு 25 சதவீதம் பேரும், வருண்காந்திக்கு 23 சதவீதம் பேரும் அதரவாக கருத்து கூறினார்கள். பாரதிய ஜனதாவில் மற்ற தலைவர்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்பது தெரியவந்தது.

    ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி இந்த தேர்தலில் 74 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. கடந்த தேர்தலில் 224 இடங்களை இந்த கட்சி கைப்பற்றியது. இப்போது அதில் இருந்து 170 இடங்களை இழக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கருத்து கணிப்பு எடுக்கப்பட்டவர்கள் பலர் முதல்-மந்திரி அகிலேஷ்யாதவை கடுமையாக குற்றம் சாட்டினார்கள். அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நாசமாகி விட்டதாக 29 சதவீதம் பேரும், விலைவாசி உயர்ந்து விட்டதாக 18 சதவீதம் பேரும், ஊழல் மலிந்து விட்டதாக 16 சதவீதம் பேரும், எந்தவித வளர்ச்சியும் இல்லை என்று 15 சதவீதம் பேரும், வேலை வாய்ப்பு இல்லை என்று 12 சதவீதம் பேரும் கூறினார்கள்.

    உத்தரபிரதேசத்தில் மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி 28 இடங்களை கைப்பற்றி இருந்தது. அதேபோல கடந்த தேர்தலில் சுயேச்சைகள் மற்றும் உதிரி கட்சியினர் 28 இடங்களை கைப்பற்றி இருந்தனர்.

    இந்த தடவை அவர்கள் 10 இடங்களை மட்டுமே பிடிப்பார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.
    Next Story
    ×