search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் நாளை பந்த்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு
    X

    ஆந்திராவில் நாளை பந்த்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து நாளை மாநில முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
    நகரி:

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்திய மந்திரி அருண் ஜெட்லி அளித்த பேட்டியில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க முடியாது.

    பொருளாதார கமி‌ஷன் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது என கூறி விட்டது. அதற்கு இணையான சலுகைகள் ஆந்திராவுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதுகுறித்து ஆந்திராவை சேர்ந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில், ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் மட்டும் வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி ஒப்புதல் வழங்கிய பிறகு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

    இதனால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுகள், பல்வேறு அமைப்புகள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர்.

    ஆர்ப்பாட்டம்-மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்த போது தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் பரபரப்பு நிலவியது.

    ஜி.எஸ்.டி. மசோதாவை ஆமோதிப்பதற்காக ஆந்திர சட்டசபை நேற்று கூடியது. இதில் மந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். சிறப்பு அந்தஸ்து மறுக்கப்பட்டது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் பேச அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து நாளை மாநில முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சி அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    Next Story
    ×