search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் விவகாரத்தில் ஒற்றுமை தேவை: கர்நாடக அரசியல்வாதிகளுக்கு முன்னாள் பிரதமர் அறிவுரை
    X

    காவிரி நீர் விவகாரத்தில் ஒற்றுமை தேவை: கர்நாடக அரசியல்வாதிகளுக்கு முன்னாள் பிரதமர் அறிவுரை

    காவிரி நீர் விவகாரத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என கர்நாடக அரசியல்வாதிகளுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுறுத்தியுள்ளார்.
    பெங்களூர்:

    காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு கர்நாடக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூர், சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் பெங்களூர்-மைசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கன்னட அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி தண்ணீரில் நின்றபடி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    முன்னாள் எம்.பி. மாதே கவுடா தலைமையில் காவிரி நலன் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    கிருஷ்ணராஜசாகர் அணை மண்டியா மாவட்டத்தில் இருப்பதால் அந்த மாவட்டத்தில் மட்டும் இன்று முழு அடைப்பு நடந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

    பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் பஸ்கள் மண்டியா மாவட்டத்தின் வழியாக செல்வதால் பெங்களூர்-மைசூர் இடையே இன்று பஸ்கள் ஓடவில்லை. அதேபோல் மைசூரில் இருந்து மண்டியா வழியாக ஊட்டி செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் பலர் இன்று சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுப்போம். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    வருகிற 9-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில், பெங்களூரில் இன்று மாலை முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அவர், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு மூன்றுபோகம் பயிர்களை விளைவிக்கின்றனர். ஆனால், கர்நாடகத்தில் ஒருபோக விளைச்சலுக்கு கூட போதுமான தண்ணீர் இல்லை. குடிக்கவே தண்ணீர் இல்லாதபோது தமிழ்நாட்டில் சம்பா பயிர் சாகுபடிக்கு எப்படி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருப்பவர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்று, காவிரி நீர் விவகாரத்தில் மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும். கர்நாடக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்துவது இயல்பானதுதான்.

    ஆனால், சட்டம்-ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துகொண்டு யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் ஒன்றுபட்டு அமைதியான முறையில் போராட வேண்டும். மாறாக, வன்முறை சார்ந்த போராட்டத்தால் நமது சொத்துகள் சேதமாவதைத் தவிர வேறொன்றையும் நம்மால் சாதித்துவிட முடியாது என்றும் தேவேகவுடா கூறியுள்ளார்.
    Next Story
    ×