search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மாணி காங்கிரஸ் பிரிந்தது
    X

    காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மாணி காங்கிரஸ் பிரிந்தது

    காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த மாணி காங்கிரஸ் பாரதிய ஜனதாவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள காங்கிரஸ் சார்பில் மறைந்த கருணாகரன் முதல்-மந்திரியாக இருந்த போது, அந்த கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த கே.எம். மாணி, பாலகிருஷ்ணபிள்ளை ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார்கள்.

    காங்கிரஸ் (எம்) என்ற கட்சியை மாணியும், காங்கிரஸ் (பி) என்ற கட்சியை பாலகிருஷ்ண பிள்ளையும் தொடங்கினார்கள்.

    கடந்த 2011 சட்டசபை தேர்தலில் மாணி கட்சி, காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மாணிக்கு நிதி மந்திரி பதவி வழங்கப்பட்டது. அப்போது மாணி மீது கேரள மாநில மது பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர், மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் மாணி கட்சி, காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சியை பிடித்தது.

    காங்கிரசின் தோல்விக்கு சோலார் பேனல் மோசடி புகார், மாணியின் பார் ஊழல் வழக்கு ஆகியவையே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.

    மோதல் போக்கு உருவானதை தொடர்ந்து காங்கிரசுக்கும், மாணி கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் மாணி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    காங்கிரஸ் (எம்) கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பத்தனம் திட்டாவில் நடந்தது. இதில் கே.எம்.மாணி எம்.எல்.ஏ., ஜோசப் எம்.எல்.ஏ., மாணியின் மகன் ஜோஸ் கே மாணி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் (எம்) விலகுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த கே.எம். மாணி கூறியதாவது:-

    காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் உட்கட்சி பூசல், விட்டு கொடுக்கும் தன்மை இல்லாததால் அந்த கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். காங்கிரஸ், கம்யூனிஸ்டு கூட்டணியில் இணையாமல் இருந்தாலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்கும்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் சேருவது பற்றி தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. எங்கள் கட்சி தனித்து நின்றாலும் எந்த சேதாரமும் கட்சிக்கு ஏற்படாது. எங்களது அடுத்தக் கட்ட முடிவுகள், வேறு கூட்டணியில் இணைவது போன்றவை பற்றி செயற் குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் கே.எம். மாணி தனது கட்சியை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைத்து செயல்படவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    கே.எம். மாணியின் முடிவு பற்றி முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறும்போது, கடந்த 5 ஆண்டு காலமாக எங்களுடன் சேர்ந்து மாணி செயல்பட்டார். தற்போது அவர், கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை குறை கூற தயாராக இல்லை. உட்கட்சி பூசல் என்பது அரசியலில் சகஜமானது ஒன்றுதான் என்றார்.

    கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறும்போது, காங்கிரசில் இருந்து மாணி பிரிந்ததை குறை கூற முடியாது. அது தவறு இல்லை. இதற்கு முன்பு அவர்கள் பிரிவதும், இணைவதுமாக இருந்துள் ளனர். பாரதீய ஜனதா கட்சியில் இணைவதாக அவர் முடிவு எடுத்தால் அந்த கட்சியில் மாணியும், அவரது மகனும் மட்டும்தான் இருப்பார்கள் என்றார்.

    பாரதீய ஜனதா மாநில தலைவர் குமணம் ராஜசேகரன் கூறும்போது, காங்கிரஸ் கட்சியின் நிலை பாடு சரி இல்லை. இதனால் தற்போது மாணி விலகி உள்ளார். அடுத்த 5 ஆண்டு களில் மேலும் பலர் காங்கிரசில் இருந்து பிரிவார்கள். மாணி பாரதீய ஜனதா பக்கம் சாய்வார் என்று தெரிகிறது. மேலும் பலர் பாரதீய ஜனதாவில் இணைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×