search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பேட்டி
    X

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பேட்டி

    சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியின்போது கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து, மாலை அணிந்து, இருமுடி சுமந்து வந்தே அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன.

    சபரிமலைக்கு சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பெண்களுக்கும் கட்டுப்பாடு உள்ளது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கோவிலுக்கும் வரும் பக்தர்களை போலீசார் கண்காணித்த பிறகே மலை ஏற அனுமதிக்கிறார்கள்.

    இந்த நிலையில் சபரி மலையில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களை அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. தற்போது நடைபெறும் கம்யூனிஸ்டு ஆட்சியிலும் இதே கருத்து கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சமீபத்தில் கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கருத்து தெரிவிக்கும்போது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் தவறு இல்லை. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்படும் என்று கூறி உள்ளார்.

    இதற்கிடையில் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பெண்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. எனவே சபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கூறமுடியாது.

    கடந்த ஆண்டு மகர விளக்கு, மண்டல விளக்கு பூஜையின் போது 5 லட்சம் பெண்கள் வரை சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். அதே சமயம் 800 ஆண்டுகளுக்கு மேலாக 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை என்ற தடையை நீக்க முடியாது.

    இது தொடர்பாக பார்க்கப்பட்ட தேவபிரசன்னங்களிலும் இளம்பெண்களை அனுமதிக்க கூடாது என்றே தெரியவந்துள்ளது. எனவே இதை மீறமுடியாது. ஒருவேளை சுப்ரீம்கோர்ட்டு பெண்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டாலும் சபரிமலை ஐதீகத்தை மீறி பெண்கள் செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    முன்பு பம்பையில் சுவாமி அய்யப்பனுக்கு ஆராட்டு நடக்கும்போது வயது வித்தியாசம் இன்றி பெண்கள் பங்கேற்றனர். ஆராட்டில் இளம்பெண்கள் பங்கேற்ககூடாது என்று தேவசம் போர்டு கூறிய பிறகு பெண்கள் யாரும் ஆராட்டுக்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×