search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அவசியம்-விழிப்புணர்வு முகாமில் சித்த மருத்துவர் பேச்சு
    X

    உடன்குடி பள்ளியில் பழங்கால சித்தர்களை வைத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அவசியம்-விழிப்புணர்வு முகாமில் சித்த மருத்துவர் பேச்சு

    • நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது.
    • மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் ஸ்ரீராம கிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை தாங்கி பதினெண்சித்தர் திருவுருவச் சிலைகளுக்கு குத்துவிளக்கு ஏற்றி விழா வினை தொடங்கி வைத்தார்.

    இதில் சித்தர்களின் வரலாறு பற்றியும், பெருமை பற்றியும் பாரம்பரிய உணவு பற்றியும் விரிவாக பேசப்பட்டது. சாத்தான்குளம் அரசு சித்த மருத்துவர் வைகுண்ரமணி பேசியதாவது:-

    யோகா கலை காயகற்ப மருந்துகளில் ஒன்று. காயகல்ப மருந்து என்பது உடம்பை கல்போல் ஆக்கி நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி மனிதனை வாழச் செய்யும்ஓர்அற்புத மருந்து.மனதை ஒரு நிலைப்படுத்தி, அமைதிப்படுத்தி உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்வைத் தருகிறது. இன்றைய மாணவர்களுக்கு யோகா சனத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகும்.பயம், பதட்டம், மன உளைச்சல், மன அழுத்தத்தினால் மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகிறது அல்லது அவர்களின் மனதிலே வன்முறை எண்ணங்கள் எழுகின்றது.

    யோகாசனம் மாணவர்களிடம் ஏற்படும் வன்முறை உணர்வுகளைப் போக்கி, தற்கொலை எண்ணங்கள் அவர்களிடம் எழாதவாறு அவர்களின் மனதை அமைதிப்படுத்தி, தூய்மைப்படுத்தி தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கு கிறது. மாணவர்களின் நினைவாற்றல், ஞாபகசக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்க திருமூலர் அட்டாங்க யோகத்தில் கூறிய பிராணயாம மூச்சுப் பயிற்சி மாணவர்கள் தினந்தோறும் செய்ய வேண்டும். மூச்சை அடக்க பழகுவதன் மூலம் மனதையும் அடக்கலாம்.மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் முகாமில் மூலிகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்மூலிகைக் கண்காட்சி, பாரம்பரிய உணவு முறைகள், சிறுவர்களின் புரதச் சத்துக் குறைபாட்டைப் போக்கும் பஞ்சமுட்டி கஞ்சி, நவதானியங்கள், அஞ்சறைப்பெட்டி வைத்தியம், உணவில் திரிதோட சமனப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைகள், உணவுப் பொருட்கள், ரத்தசோகை நோயை போக்கும் உணவுகள், மருந்துகள், எண்ணெய் தேய்த்துக் குளித்தலினால் ஏற்படும் பயன்கள், நலுங்கு மாவு குளியல் பொடி சித்தர்களின் நாள், கால ஒழுக்கம் போன்ற சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    மாணவர்களுக்கு கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பேரிச்சம் பழம் மற்றும் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டினை காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுநர் முருகேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மெஞ்ஞானபுரம் சித்தா மருந்தாளுனர் ஆறுமுகம், ஐ.சி.டி.சி. கவுன்சிலர் சங்கர், பார்த்திபன், பள்ளி ஆசிரியர்கள் ராஜ திலகவதி, ராமலிங்கம், சிவசுப்பிரமணியன், அஜய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அய்யங்கண்ணு, அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×