search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை - திருச்சி , சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
    X

    தொடர் விடுமுறை - திருச்சி , சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

    • தந்திர தின விடுமுறையுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும் சேர்ந்து வந்த காரணத்தினால் வெளியூர்களில் தங்கி இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகினர்.
    • நேற்று மதியம் முதல் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை மற்றும் சமயபுரம் சுங்கச்சாவடிகள் அல்லோலபட்டன.

    திருச்சி,

    இந்திய சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த 75 -வது சுதந்திர தின விழாவை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களும் கொண்டாட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின விடுமுறையுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும் சேர்ந்து வந்த காரணத்தினால் வெளியூர்களில் தங்கி இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகினர்.

    சென்னையில் தங்கியிருந்த லட்சக்கணக்கான மக்கள் நேற்றைய தினமே விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊர் களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர்.

    இதனால் நேற்று மதியம் முதல் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை மற்றும் சமயபுரம் சுங்கச்சாவடிகள் அல்லோலபட்டன.

    தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் கூட இந்த அளவுக்கு கார்கள் அணிவகுத்து வந்ததில்லை என சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் சர்வீஸ் சாலைகளில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    பொதுவாக சென்னையில் இருந்து சேலம், சிதம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து பிரிந்து சென்று விடுவார்கள். அதன் பின்னர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நெரிசல் இல்லாமல் இருக்கும். ஆனால் நேற்றைய தினம் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் இருப்பினும் தடை ஏதும் ஏற்படவில்லை என்று சுங்கச்சாவடி பணியாளர்கள் கூறினர்.

    Next Story
    ×