search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலையத்துக்கு  புதிய 6 வழி இணைப்புச் சாலை   ரூ.45 கோடியில் அமைகிறது
    X

    விமான நிலையத்துக்கு புதிய 6 வழி இணைப்புச் சாலை ரூ.45 கோடியில் அமைகிறது

    • இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
    • 2 பக்கமும் சேவை சாலைகளும் அமைக்கப்படும்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தற்போது உள்ள பன்னாட்டு விமான நிலையம் 627 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 135 ஏக்கரும், புறம் போக்கு நிலம் 30 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமான 462 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டன. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை சுமார் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுவிட்டன. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு அவை நில உரிமையாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. மீதி 162 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    அதன்பின்னர் இதுவரை கையகப்படுத்தப்பட்ட 627 ஏக்கர் நிலமும், மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் பெயருக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் விமான நிலைய விரிவாக்கம் முடிந்த பின்னர் அதற்கு செல்லும் இணைப்பு சாலைகளும் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.

    அதன்படி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் அதன் முனையம் கோவை-அவினாசி சாலையில் நீலாம்பூர் அருகே அமைக்கப்பட உள்ளது. இணைப்பு சாலை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் முன்பிருந்து தொடங்கி விமான நிலைய முனையம் வரை 4.25 கிலோ மீட்டர் நீளத்துக்கு 6 வழி ஒணைப்புச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: தற்போது உள்ள கோவை விமான நிலையத்திற்கு அவினாசி சாலையில் சிட்ரா சந்திப்பிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலையாக அமைந்துள்ளது.

    ஆனால் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்த பின்னர் புதிய விமான நிலையத்தின் பிரதான வழி தனியார் ஓட்டல் முன்பிருந்து அமைய உள்ளது. அது 6 வழிச்சாலையாக இருக்கும். இதன் 2 பக்கமும் சேவை சாலைகளும் அமைக்கப்படும். விரிவாக்கத்திற்கு பின்னர் புதிய விமான நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் தவிர தற்போது உள்ள பழைய இணைப்பு சாலையும் பயன்பாட்டில் இருக்கும்.

    மேலும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் விரைவாக விமான நிலையத்தை அடையும் வகையில் வ.உ.சி பூங்கா முன்பிருந்து கோல்டு வின்ஸ் வரை உயர் மட்ட மேம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அந்த மேம்பாலத்தில் வருபவர்கள் சிட்ரா சந்திப்பிலிருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் செல்லும் வகையிலும். கோல்டுவின்சில் இறங்கும் வாகனங்கள் அதன்பின்னர் தனியார் ஓட்டல் முன்பு புதிதாக அமைய உள்ள சாலை வழியாக செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×