என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிகள் திறந்தும் கல்வி கிடைக்காமல் தொழிலாளர்களாக மாறும் குழந்தைகள்
- தமிழகத்தில் 213 சிறப்பு மையங்களில் 3 ஆயிரத்து 190 பேர் பயின்றனர். 700-க்கும் மேற்பட்டோர் பணி செய்து வந்தனர்.
- பல்வேறு இடங்களில் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
திருப்பூர்:
14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, வசிப்பிடங்களிலேயே மதிய உணவு, ஊக்கத்தொகையுடன் கல்வி வழங்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரவை நாடு முழுவதும் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத்திட்டத்தை அமல்படுத்தியது. நாடு முழுவதும் 312 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 213 சிறப்பு மையங்களில் 3 ஆயிரத்து 190 பேர் பயின்றனர். 700-க்கும் மேற்பட்டோர் பணி செய்து வந்தனர்.
தமிழகத்தில் 1995-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு 7 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டு, பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக்கப்பட்டது. இந்த மையங்களில்பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ. 150 வழங்கப்பட்டது. கடந்த மார்ச் 31-ந் தேதியோடு, சிறப்பு பயிற்சி மையத் திட்டம் மத்திய அரசால் கைவிடப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது.
குழந்தைகளை அருகில் உள்ள முறைசார் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தன்னார்வலர் மா.சக்திவேல் கூறும்போது, கொரோனாவுக்கு பிறகு பள்ளி சென்று வந்த குழந்தைகளின் நிலையே பெரும் கவலையாக உள்ளது. தொழிலாளர்களாக மீட்கப்பட்ட குழந்தைகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்ப்போம்.
கொரோனாவுக்கு பின்பு, குடும்பங்களில் அதிகரித்துள்ள வறுமை காரணமாக பல குழந்தைகளை பெற்றோர் வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் 27 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களில் சுமார் 650 பேர் படித்து வந்தனர். தற்போது இவர்களில் எவ்வளவு பேர் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்ற விவரம் இல்லை. புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் பலர், மொழிப்பிரச்சினையால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. அங்கிருக்கும் ஆசிரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியாத நிலை நீடிக்கிறதுஎன்றார்.
திருப்பூரை சேர்ந்த ஆசிரியர்கள் கூறும்போது, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் மேற்குவங்கம், அசாம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகம், ஆந்திரா, பீகார், ஓடிசா மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலனோர் குழந்தைகள், குடியிருப்பு மற்றும் வேலை பார்க்கும் நிறுவனங்களில் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்த்தாலும், பள்ளிக்கு முறையாக வருவதில்லை. குழந்தைகளும் வேலைக்கு செல்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த பெற்றோர்களும், குடும்ப வறுமையை காரணங்காட்டி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது தற்போது அதிகளவில் காண முடிகிறது என்றனர்.
திருப்பூர் சுப்பிரமணியபுரம், செவந்தாம்பாளையம், கோவில்வழி உட்பட பல்வேறு இடங்களில் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் இதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் துயரம் என்கிறார் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் ஒருவர்.
மேலும், குழந்தைகள் பலர் 10 வயதை தொட்ட நிலையில், பேக்கிங், டூவீலர் ஒர்க்ஷாப், மாடு மேய்ப்பது, மாலை நேர சிற்றுண்டியகங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் புறக்கணித்தால், அவர்கள் வறுமையோடு போராடுவார்களா அல்லது கல்வி கிடைக்க பாடுபாடுவார்களா? மத்திய பாஜக. அரசால் மூடப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளை, மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றார்.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் வைத்து, சுடர் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட கோவை மாவட்ட திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் உட்பட பலர் மூடப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை, மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர் இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்