search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவ்வாதுமலை சாலையை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஜவ்வாதுமலை சாலையை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

    ஜவ்வாதுமலை சாலையை அகலப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • போக்குவரத்து பாதிப்பு
    • வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்றது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலைசாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ப்பட்டுள்ளதுஇந்த சாலை வழியாக வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த மலைசாலை பயன்படுகிறது.

    இவ்வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கிறது. குறிப்பாக காவலூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும், மேலும் ஜமுனாமரத்தூர் பகுதிகளில் வசித்து வரும், மலைவாழ் மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு இந்த மலைசாலையையே பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த சாலை மிகவும் குறுகளாக இருக்கின்ற காரணத்தினால், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த இடத்தில் ஏற்கனவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 6 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர்.மேலும் 2 வாகனங்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது கூட சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்தி தரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பழைய சாலை மீது புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது.

    இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்த விட்டதால், எதிர் திசையில் பயணிக்கும் இரண்டு வாகனங்கள் சந்திக்கும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடிக்கும் கீழே உள்ள பள்ளத்தில் வாகனங்களை இறக்குவதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்க முயலும்போது, கீழே விழுந்து விபத்தில் காயப்படும் நிலை தொடர்வதால், பக்கவாட்டில் உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் அரசுக்கு கோரி கோரிக்கை வைத்திருந்தனர்.

    கடந்த மாதம் சாலையை அகலப்படுத்த வந்திருந்த மாநில நெடுஞ்சாலை துறையினரை, வனத்துறையினர் அனுமதி இன்றி சாலையை அகலப்படுத்தும் பணி செய்ய முடியாது என்று வனத்துறையினர் பணியை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மலை கிராமத்தை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நொசக்குட்டை பகுதியில் நடு ரோட்டில் பந்தல் அமைத்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மலைக்கு செல்லும் வாகனங்களும் மலையிலிருந்து கீழே இறங்கும் வாகனங்களும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சாலையை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொங்கவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஆர்.எம்.எஸ் புதூர் காவலூர் இடையே மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க அனுமதிக்க கோரி வனத்துறையிடம், நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்திருந்த நிலையில், ரூ.47 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. அதற்கான கட்டணத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வனத்துறையினருக்கு கட்ட காலதாமதம் செய்து வந்தனர்.

    இந்நிலையில், நீண்ட நாட்கள் கடந்த பின்பும், நெடுஞ்சாலை துறையினர் உரிய பணத்தை செலுத்தாமலும், சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாமலும் இருந்தனர். இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.நேற்றும் மீண்டும் விபத்து ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மலை கிராம மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சம்பத், இன்ஸ்பெக்டர் பழனி, நாகராஜன் ஜெயலட்சுமி,வனச்சர அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் 5 மணி நேர சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலினால் ஏராளமான வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நின்றது.

    Next Story
    ×