search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் - பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்பு
    X

    கோப்புபடம்

    திருப்பூர் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் - பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்பு

    • புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர்.
    • அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் அதே வேளையில், புதிய வகுப்பில் மாணவர்கள் பலரும் சேர்ந்து பாடங்களை படிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் பலர் தொழில் நகரமான திருப்பூரை நோக்கி படையெடுப்பு, வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு குடிபெயர்ந்து பள்ளிகளில் சேர்வது என அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி பணம் கேட்பதாகவும், சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்காமல் திருப்பி அனுப்புவதகாவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுயதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 35-வது வார்டு விஜயாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்புக்கு மகனை சேர்க்க சென்றோம். அப்போது, மாணவர் சேர்க்கைக்கு உங்களால் முடிந்த தொகை என்று ஆரம்பித்து, ரூ. 1000-ம் வரை கேட்டார்கள். எதற்கு, அரசுப் பள்ளியில் பணம் கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினோம். வகுப்புகளை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என அங்கிருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பெற்றோர் பலரும், எதிர்ப்பு தெரிவிக்க பணம் வாங்கவில்லை என்றனர்.

    இடுவம்பாளையம் அரசுப் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியில் சேர வரும் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் வடிவேல் கூறும்போது, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்காததால், பலரும் கல்வி பெறுவது தடைபடுகிறது. காரணத்தை ஆசிரியர்கள் சொல்ல மறுப்பதால், பெற்றோர்கள் பலரும் செய்வதறியாது எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி. அலுவலகங்களுக்கு பரிந்துரை கடிதம் பெறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி என்பது கட்டாயம். ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பல்வேறு காரணங்களை சொல்லி புறக்கணிப்பதால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. சில அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தவர்கள், தமிழ்வழிக்கு மாறுவதென்றாலும் அவை உடனடியாக கிடைப்பதில்லை.

    குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அலைபேசிக்கு ஓடிபி எண் வரும். அதன் பின்னர் தான் வகுப்பில் சேர்க்க முடியும் என்கின்றனர். சுமார் 3 மாதங்கள் ஆகிறது என்றால், அந்த மாணவர் தமிழ்வழியில் படிப்பதா? அல்லது ஆங்கில வழியில் படிப்பதா? என்ற குழப்பம் மேலோங்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியை இல்லையெனக் கூறி, எல்.கே.ஜி வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதில்லை என்றார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறும்போது, அரசுப் பள்ளிகளில் பணம் பெறக்கூடாது. சில பள்ளிகள் மீது புகார்கள் வந்தன. அவற்றை எச்சரித்துள்ளோம். அதேபோல் மாணவர் சேர்க்கை புறக்கணிப்பு தொடர்பாக, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வரும் நிலையில், அங்கு 47 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அரசு தரப்பில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் எல்.கே.ஜி உட்பட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர்கள் தயங்கலாம். இருக்கும் ஆசிரியர்களை வைத்து தான், வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆங்கிலவழியில் இருந்து தமிழ்வழியில் படிக்க நினைப்பவர்களை எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

    Next Story
    ×