search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்கையில் வெற்றி பெறும் வரை கூட்டணி தொடரும்- இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

    கொள்கையில் வெற்றி பெறும் வரை கூட்டணி தொடரும்- இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

    • காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கமும் இன்று ஒரே மேடைக்கு வந்திருக்கின்றன.
    • மாநிலங்களின் மீது பழிபோட்டு மத்திய நிதி அமைச்சர் தப்பிக்கப் பார்க்கிறார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில 25-வது மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாம் அனைவரும் ஒரே கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். தனித்தனி இயக்கமாக இருந்தாலும், கொள்கையால் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் - என்ற உணர்வோடுதான் நான் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறேன்.

    அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை நமது அரசு வெளியிட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும் நாளில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் என்பது மிக மிக பொருத்தமான ஒன்று.

    ஏனென்றால் அய்யா நல்லகண்ணு நாட்டுக்கு தன்னையே ஒப்படைக்கும் மன உறுதி படைத்தவர். எளிமையின் சின்னமாக - கொள்கையின் அடையாளமாக வாழும் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, தகைசால் தமிழர் விருதை வழங்குவதை எனக்குக் கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன். அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதன் மூலமாகத் தமிழ்நாடு அரசு பெருமை அடைகிறது.

    தோழர் முத்தரசன் விடுத்த கோரிக்கையை ஏற்று, அண்ணல் காந்தியடிகளும், தோழர் ஜீவா அவர்களும் சந்தித்த சந்திப்பின் அடையாளமாக சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

    சமூக, மத நல்லிணக்கத்தின் அடையாளம்தான் அண்ணல் காந்தி அவர்கள். அந்த நல்லிணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர்களால் அவர் கொலை செய்யப்பட்டார். இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 1953-ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் தோழர் ஜீவா.

    இந்திய நாட்டுக்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது. மற்றொன்று மாநிலங்களின் உரிமைகளைச் சிதைப்பது. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை.

    அமைதியாக இந்தியா இருப்பதை சிலர் விரும்பவில்லை. இதனைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள்தான் தேசவிரோத சக்திகள், இவைதான் நாட்டினுடைய எதிரிகள்.

    இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மைப் பார்த்து, தேசவிரோதிகள், நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

    அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள், அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள், எந்த மதத்தைச் சார்ந்தவர்களது வழிபாட்டு உரிமையிலும் தலையிடாதீர்கள்,

    நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேச விரோதமா? அல்லது, ஒரே மதம், ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்கவேண்டிய கேள்வி இது மட்டும்தான்.

    நான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன். இது எனக்குத் தானாக வந்துவிடவில்லை. தோழமைக் கட்சிகளாகிய உங்களின் பேராதரவுடன் இந்த இடத்தில் உங்களால் நான் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

    இந்த 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எதிராக பொய்யையும், அவதூறுகளையும் நாள்தோறும் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். ஆட்சியைப் பற்றி குறைசொல்வதற்கு ஏதும் கிடைக்காததால், அவதூறுகளையும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் கை கொண்டிருக்கிறார்கள்.

    வளமான தமிழ்நாட்டை - அனைவருக்குமான தமிழ்நாட்டை திராவிட மாடலில் நாம் உருவாக்கி வருகிறோம். இந்த திராவிட மாடல் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் தத்துவமாக அமைந்துள்ளது.

    75-ஆம் ஆண்டு விடுதலை நாளை நாம் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் இருக்கக் கூடாது! இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு, இந்தியா வலிமை உள்ளதாக இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.

    இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கி உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களிடம் இருக்கிற நிதி உரிமையைப் பறிக்கிறது. ஜி.எஸ்.டி வரி. வரியை ஏற்றிவிட்டு, மாநிலங்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    வரியை மொத்தமாக வாங்கிக் கொண்டு, அதற்கான இழப்பீட்டை உரிய காலத்துக்குள் தராமல் மாநிலங்களை வஞ்சித்து வருகிறார்கள். மாநிலங்களிடம் இருக்கிற கல்வி உரிமையை, புதிய கல்விக் கொள்கை மூலமாகவும், நீட் போன்ற தேர்வுகளின் மூலமாகவும் பறிக்கிறார்கள்.

    சமூக விடுதலை பேசிய திராவிட இயக்கமும் - நாட்டு விடுதலை பேசிய காங்கிரஸ் கட்சியும் - பொருளாதார வர்க்க விடுதலை பேசிய கம்யூனிஸ்ட் இயக்கமும் இன்றைக்கு ஒரே மேடைக்கு வந்திருக்கிறோம். ஏனென்றால், இன்று அனைவைரும் பேச வேண்டியது சமூக நல்லிணக்கமும் - மாநில உரிமைகளும்தான்.

    தனித்தனியாக போராடி வந்த நாம் இன்று ஒன்றாகப் போராட வேண்டி ஒன்று சேர்ந்துள்ளோம். அதனால்தான், இது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலோடு முடிந்துவிடும். கொள்கைக் கூட்டணியாக இருப்பதால், நம் கொள்கையில் வெற்றி பெறும் வரை இது தொடரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×