search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழா: ஆயிரம் ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
    X

    விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் தரையில் அமர்ந்து உணவருந்திய காட்சி.

    கோவில் திருவிழா: ஆயிரம் ஆடுகளை வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பூஜை நடத்துவது வழக்கம்.
    • இந்த விருந்தில் வழக்கம்போல் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.
    • இந்த கிடா வெட்டு திருவிழா சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    ஒரத்தநாடு :

    தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள தளிகைவிடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லபெரமஅய்யனார், செம்முனி, முத்துமுனி கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கிடா வெட்டு பூஜைதிருவிழா கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வெட்டப்பட்டன.

    இவ்வாறு நேர்த்திகடனாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி கோவில் அருகே விரைவாக சமையல் செய்யப்பட்டது. இறைச்சி வெட்டுதல், சமையல் பணி மற்றும் உணவு பரிமாறுதலில் சுமார் 500 பேர் ஈடுபட்டனா்.

    பின்னர் கறிக்குழம்புடன், 100 மூட்டை அரிசி சாதமாக வடித்து, நேற்று காலை 9 மணி முதல் சிறுவர்கள் முதியவர்கள் வரை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த பூஜை விருந்தில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சாதத்தை வைத்துக் கொண்டு, 500-க்கும் மேற்பட்டவர்கள் உணவுகளை பரிமாறினர். இந்த பூஜை விருந்தில் பங்கேற்றவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தரையில் அமர்ந்து வாழை இலையில் மகிழ்ச்சியுடன் கறிக்குழம்புடன் அரிசி சாதத்தை சாப்பிட்டனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய கறி விருந்து மதியம் வரை நடந்தது. இதனால் கோவில் அருகே உள்ள திறந்த வெளி பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் ஆண்கள் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து கோவிலின் அறங்காவலர் குழுதலைவரும், ஊராட்சி தலைவருமான பொன்.முத்துவேல் கூறியதாவது:-

    எங்களது கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பூஜை நடத்துவது வழக்கம். இந்த கிடா வெட்டு திருவிழா சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    இந்த விழாவில் பங்கேற்க கிராம மக்கள், மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுப்போம். நேற்று முன்தினம் இரவு ஆடு வெட்டும் பூஜை தொடங்கியது. இதில் நேர்த்திக்காக பக்தர்கள் வழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு கிடாய்கள் விடிய -விடிய வெட்டப்பட்டன. நேற்றுகாலை முதல் பக்தர்களுக்கு அன்னதானமாக கறி விருந்து வழங்கப்பட்டது.

    இந்த விருந்தில் வழக்கம்போல் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். சமையல் பணியிலும் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டனர்.

    100 மூட்டை அரிசி சாதமாக வடிக்கப்பட்டது. சாதத்தை டிராக்டர், மற்றும் லோடு ஆட்டோவில் வைத்துக் கொண்டு 500-க்கும் மேற்பட்டோர் உணவுகளை பரிமாறினர். இந்த கோவில் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இந்த கிடா வெட்டு பூஜை திருவிழாவை நாங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு தலைமுறை தலைமுறையாக நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×