search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திராவிட மாடல் எனக்கூறி மக்களை துன்பப்படுத்துகிறது தி.மு.க. அரசு- டி.டி.வி. தினகரன்
    X

    கோவையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டி.டி.வி. தினகரன்.


    திராவிட மாடல் எனக்கூறி மக்களை துன்பப்படுத்துகிறது தி.மு.க. அரசு- டி.டி.வி. தினகரன்

    • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை.
    • திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி துன்பப்படுத்துகின்றது.

    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் நடக்கும் கூத்தை பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை. அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

    எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம். ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. இதற்கு காலம் பதில் சொல்லும். அப்போது எல்லாம் சரியாகி விடும்.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிச்சுமையை ஏற்றி துன்பப்படுத்துகின்றது. இப்படி மக்களை துன்பப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பதை தி.மு.க அரசு நிரூபித்து வருகின்றது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்

    எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கொரோனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியை குறைக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த தி.மு.க ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

    மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது

    முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம். முறைகேடுகளை அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது.

    நீட் தேர்வு ரத்து, ஆயிரம் ரூபாய், சொத்து வரி குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள் உணர்ந்து விட்டனர்.

    எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும். அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர் புகழேந்தி, இணை செயலாளர் ராஜேஷ்குமார், துணை செயலாளர் பொன்தங்க மாரியப்பன், வட்ட செயலாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×