search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குடும்பத்துடன் திரண்ட சுற்றுலா பயணிகள்
    X
    மெயின் அருவியில் இன்று அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் அருவிகளில் குடும்பத்துடன் திரண்ட சுற்றுலா பயணிகள்

    • நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.
    • நேற்று 95.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2168.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது.

    நேற்றும் மழை தொடர்ந்தது. அதிகபட்டசமாக கடனாநதி, அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    அதே போல் ஆய்க்குடி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது. இன்று காலை குற்றாலத்தில் சாரல் தூறியது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பாதுகாப்பு கருதி மெயினருவியில் நேற்று வரை 6 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று முதல் மெயின் அருவியில் குளிக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் காலையில் குற்றாலம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் 5 பேர்களாக பிரிந்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்று முதல் ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்பு பெற்றது அகஸ்தியர் அருவி. காரையாருக்கு செல்லும் மலைப்பாதையில் சாலை பணிகள் காரணமாகவும், சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா காரணமாகவும் கடந்த 25 நாட்களாக தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் வனத்துறை குளிக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடந்து இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.

    நேற்று 95.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 98 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2168.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1004.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அதேபோல் நேற்று 116.75 அடி நீர்மட்டம் இருந்த அடவிநயினார் அணையின் உயரம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 118 அடி உயரமாக உள்ளது. கடனாநதி, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடியே உள்ளது.

    Next Story
    ×