search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் கடனில் தவிக்கும்போது கடலில் ரூ.80 கோடியில் பேனா தேவையா?- செல்லூர் ராஜூ கேள்வி
    X

    மக்கள் கடனில் தவிக்கும்போது கடலில் ரூ.80 கோடியில் பேனா தேவையா?- செல்லூர் ராஜூ கேள்வி

    • மக்களுக்கு திட்டங்களைத் தர நிதி இல்லையா? மக்கள் ஒவ்வொருவரும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்.
    • வறுமையில் வாடுகிறார்கள். கடனில் தவிக்கிறார்கள்.

    மதுரை:

    மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலை சந்திப்பில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பொறுப்பேற்ற 5-வது நாளில் தி.மு.க. அரசுக்கு சாவு மணி அடிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையாவது செய்தது உண்டா? கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டார்கள். காரணம் கேட்டால் நிதியில்லை என்கிறார்கள். ஆனால் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு நிதி இருக்கிறது. இப்போது கருணாநிதி நினைவாக கடலில் பேனா அமைப்பதற்கு ரூ.80 கோடியை ஒதுக்குவதற்கு நிதி இருக்கிறது.

    மக்களுக்கு திட்டங்களைத் தர நிதி இல்லையா? மக்கள் ஒவ்வொருவரும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். வறுமையில் வாடுகிறார்கள். கடனில் தவிக்கிறார்கள். இப்போது கடலில் பேனா தேவையா? இதனை தி.மு.க. ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள் செய்தார்களா? அனிதா மரணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கள்ளக்குறிச்சி மாணவி இறப்பில் மவுனம் சாதிப்பது ஏன்?

    தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் விரைவில் கொதித்து எழுவார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்வார்கள்.

    மின்கட்டண உயர்வை கேட்டாலே நமக்கு ஷாக் அடிக்கிறது. சொத்து வரி உயர்வு பல மடங்கு உயர போகிறது. இதனை எல்லாம் சாமானிய மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்.

    முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி உரிமையை பெற்று தந்தார். அவரது ஆட்சியிலும், எடப்பாடியார் ஆட்சியிலும் 2 முறை முல்லை பெரியாறின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு ஒருமுறை கூட முல்லை பெரியாறில் 142 அடி தண்ணீர் தேக்கப்படவில்லை. தற்போது 135.80 அடியிலேயே நிறுத்திவிட்டார்கள். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    கட்சி பொதுச்செயலாளரிடம் உரிய அனுமதியைப் பெற்று 5 மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி தி.மு.க. அரசுக்கு எதிராக மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விரைவில் நடத்துவோம்.

    எங்கள் போராட்டம் தொடரும். இங்கே திரண்டு உள்ள இந்த கூட்டத்தை பார்க்கும் போது சிலர் தி.மு.க.வுக்கு அடுத்து நாங்கள் தான் என்று பேசி வருவதற்கு சரியான சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதுமே தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சரியான எதிரி அ.தி.மு.க. தான் என்பதை இங்கு திரண்டு உள்ள கூட்டம் நிரூபித்து காட்டியுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×