search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை நகைக்கடையில் மோசடி- ரூ.55 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த சூப்பிரவைசர்
    X

    கோவை நகைக்கடையில் மோசடி- ரூ.55 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த சூப்பிரவைசர்

    • ஜெகதீஷ் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்தது போல கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும், சில தங்க நகைகளை மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
    • கடந்த சில மாதங்களாக போலியாக பதிவேடு தயாரித்துள்ளார். கம்ப்யூட்டர் பதிவுகளிலும் இவர் திருத்தம் செய்து தங்க கட்டி கணக்குகளை மோசடி காட்டி வந்ததாகவும் தெரிகிறது.

    கோவை:

    கோவை சலீவன் வீதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் மேலாளராக கார்த்திகேயன் (வயது37) என்பவர் உள்ளார். இங்கு வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(34) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் நகை கடைக்கு வரும் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்து ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணித்து வந்தார். மேலும் தங்கம் வடிவமைப்பு தர முத்திரை போன்ற பணிகளையும் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீஷ் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்தது போல கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும், சில தங்க நகைகளை மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த சில மாதங்களாக இவர் போலியாக பதிவேடு தயாரித்துள்ளார். கம்ப்யூட்டர் பதிவுகளிலும் இவர் திருத்தம் செய்து தங்க கட்டி கணக்குகளை மோசடி காட்டி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நகைக்கடையின் மேலாளர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்பு கடையின் கணக்குகளை சரி பார்த்தார்.

    அப்போது ஜெகதீஷ் போலியாக கணக்கு காட்டி ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,467 கிராம் எடையிலான தங்கத்தை அபகரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெகதீஷ் மீது வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஷ் ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கியதாக தெரிகிறது. முதலில் அவ்வப்போது மட்டுமே விளையாடி வந்த அவர், அதன் பின்னர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார்.

    நகை கடைக்கு வேலைக்கு வந்ததும் அங்குள்ள கம்ப்யூட்டர் அறைக்கு செல்லும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி விடுவார். பல மணி நேரம் ரம்மி விளையாடுவார். பெட்டிங் வைத்து இவர் பல ஆயிரம் ரூபாயை இழந்து விட்டார்.

    சம்பளம் பணம் மொத்தமும் காலியான நிலையில், இவர் நகை கடையின் தங்கத்தை மோசடியாக கணக்கு காட்டி வெளியே விற்க ஆரம்பித்தார்.

    45 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் ஒரு பவுன் தங்கத்தை இவர் பவுன் 20 ஆயிரம் ரூபாய் என தனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக விற்பனை செய்து வந்தார்.

    கடந்த 6 மாதத்தில் இவர் 180 பவுனுக்கும் அதிகமாக விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை 37 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி ஆடியுள்ளார்.

    கடந்த சில மாதங்களில் இவர் 2 கோடி ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் குவித்துள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் பல கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டி தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டுள்ளார். இதில் மொத்த பணத்தையும் இழந்து விட்டார். நாங்கள் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அவர் ரம்மி ஆட்டத்தில் குவித்த பணம், இழந்த பணம் குறித்த தகவல்கள் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் அவரிடம் கேட்டதற்கு, ரம்மி ஆட்டத்தில், இதெல்லாம் சகஜம். விட்ட பணத்தை விட அதிகமாக சம்பாதித்து விடுவேன். ரம்மி ஆடாமல் இருந்தால் எப்படி பணம் வரும் என கூறி புலம்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×