search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மோசடி: ஆசிரியை-சகோதரி கைது
    X

    நெல்லை அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மோசடி: ஆசிரியை-சகோதரி கைது

    • பேச்சியப்பன் உள்ளிட்ட அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் தகவல்களை சேகரித்து போலி ஆவணங்கள் மூலம் லீனா கூட்டுறவு சங்கத்தில் ரூ.54 லட்சம் மோசடியாக கடன் பெற்றார்.
    • பள்ளி ஆசிரியர்களின் கையெழுத்தையும் போலியாக அவர் போட்டுள்ளார். இதற்கிடையே கடன் பெற்றது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது 57). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சேரன்மகாதேவி காலன் கரை தெருவைச் சேர்ந்த லீனா ( 57). இவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    அப்பகுதியில் ஆசிரியர்களுக்கு கடன் வழங்குவதற்காக கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஆசிரியர்கள் கடன் பெற்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் பேச்சியப்பன் உள்ளிட்ட அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் தகவல்களை சேகரித்து போலி ஆவணங்கள் மூலம் லீனா கூட்டுறவு சங்கத்தில் ரூ.54 லட்சம் மோசடியாக கடன் பெற்றார்.

    இதற்காக பள்ளி ஆசிரியர்களின் கையெழுத்தையும் போலியாக அவர் போட்டுள்ளார். இதற்கிடையே கடன் பெற்றது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் செய்தனர்.

    அவர் இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட மது விலக்குப்பிரிவு டி.எஸ்.பி. மீனாட்சி நாதனுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ஆசிரியை லீனா போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக அவர்களது கையெழுத்தை போட்டு ரூ.54 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது சகோதரியான பாளை.வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சலோமி ( 60) என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×