search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் வெளுத்து வாங்கிய மழை- திற்பரப்பில் 83.6 மி.மீ. பதிவு
    X

    குமரியில் வெளுத்து வாங்கிய மழை- திற்பரப்பில் 83.6 மி.மீ. பதிவு

    • திருப்பதி சாரம் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக திருவாழ் மார்பன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
    • இன்று காலையில் மழை வெள்ளம் கோவிலுக்குள் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யுமென்று சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்ட முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் மதியம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சி புரம் சாலை, அசம்பு ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானார்கள். வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    கனமழைக்கு ஒழுகினசேரி பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருந்தது அவ்வப்போது மழை பெய்தது.

    திருப்பதி சாரம் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக திருவாழ் மார்பன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று காலையில் மழை வெள்ளம் கோவிலுக்குள் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    திற்பரப்பு அருவி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தக்கலை, சுருளோடு, களியல், பூதப்பாண்டி, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 38.37 அடியாக இருந்தது. அணைக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது. அணைக்கு 99 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 175 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.21 அடியாகவும், மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 28.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.60 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.60 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-1, பெருஞ்சாணி-7.6, சிற்றாறு-1-37.2, சிற்றாறு-2-38.6, பூதப்பாண்டி-3.5, களியல்-16.4, கன்னிமார்-2.2, குழித்துறை-2.6, மயிலாடி-7.4, நாகர்கோவில்-28.6, சுருளோடு-8.4, தக்கலை-47.2, இரணியல்-32, பாலமோர்-9.8, மாம்பழத்துறையாறு-35, திற்பரப்பு-83.6, ஆரல்வாய்மொழி-7.4, கோழிப்போர் விளை-75 அடையாமடை-7.6, குருந்தன்கோடு-31.6, ஆணைக்கிடங்கு-32.

    Next Story
    ×