search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சசிகலா ரகசிய ஆதரவு?- பண்ணை வீட்டில் நடந்த பரபரப்பு திட்டம்
    X

    ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சசிகலா ரகசிய ஆதரவு?- பண்ணை வீட்டில் நடந்த பரபரப்பு திட்டம்

    • எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ். தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார்.
    • அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    சென்னை:

    எந்தப்பக்கம் போனாலும் கட்டையை போடுறாங்களே என்ற ரீதியில் தான் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறார்.

    சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போனதும் ஆட்சியையும், கட்சியையும் தங்கள் வசமாக்க ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமியும், தனியாக கோஷ்டியாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து கொண்டார்களே தவிர அவர்ளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிய தொடங்கியது.

    அரியணையை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துவிட்டு ஜெயில் வாசம் முடிந்து திரும்பினார் சசிகலா. தான் ஜெயிலில் இருந்தபோதே தனது எதிராளியான ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தன்னையே கட்சியை விட்டு தூக்கியதை சசிகலாவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

    எதிராளிகளாக மாறிய இருவரையும் வீழ்த்தி கட்சியை கைப்பற்ற சசிகலா அமைத்த வியூகம் எதுவும் பலன் கொடுக்கவில்லை. ஆட்சி இருந்தவரை துணை முதல்-அமைச்சர் எப்போது தான் முதல்-அமைச்சர் ஆவது என்ற எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்தை தூங்க விடாமல் துரத்தியது.

    காய்களை நகர்த்த தொடங்கினார். எதிராளிக்கு எதிராளியே நண்பன் என்ற ரீதியில் சசிகலாவுடன் நெருங்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ்.

    தனக்கு எதிராக உருவாகிய வியூகத்தை உடைக்க எடப்பாடியும் ஆயத்தமானார். அதுதான் இனி ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடாது. ஒற்றை தலைமையை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தீவிரமாக செயல்பட்டார்.

    ஒவ்வொரு கட்டத்திலும் சூழ்நிலைகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே மாறியது. ஓ.பி.எஸ்சுடன் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ஒவ்வொருவராக நழுவி எடப்பாடி பக்கம் வந்து சேர்ந்தார்கள்.

    65 மாவட்ட செயலாளர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என்று யானை பலம் வந்ததும், இனி போட்டு பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டார். அதனாலேயே பொதுக்குழு கூட்டத்தில் 'ஒற்றை தலைமை' என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    ஒற்றை தலைமை என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று முடிவு செய்துவிட்டனர். பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் பணிகள் விறு விறு என்று நடந்தன.

    'நம்பர் ஒன்' என்ற தனது ஆசை தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்ந்த ஓ.பி.எஸ். ஒற்றை தலைமை வேண்டாம் என்று பேசிப் பார்த்தார். எடுபடவில்லை. கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றார். முதல் தீர்ப்பு ஏமாற்றம் அளித்ததால் மேல் முறையீடு செய்தார்கள். விடிய விடிய விசாரணை நடந்தது. கோர்ட்டும், ஏற்கனவே முடிவு செய்த 23 தீர்மானங்களை மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும். புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது.

    விடிய விடிய கண்விழித்து காத்து இருந்ததற்கு பலன் கிடைத்தது என்று சற்று ஆறுதல் அடைந்தார். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

    அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் மின்னல் வேகத்தில் கையெழுத்து பெற்றார்கள். கூட்டம் தொடங்கியதும் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விட்டு ஒற்றை தலைமை என்ற தீர்மானத்தோடு மீண்டும் பொதுக்குழு என்ற அறிவிப்பு ஓ.பி.எஸ்.சை அதிர வைத்தது.

    பொதுக்குழுவுக்கு செல்லும் போதாவது தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். மாறாக எதிர்ப்பை மட்டுமே அவரால் சம்பாதிக்க முடிந்தது. சோர்ந்து போன ஓ.பி.எஸ். தரப்பினர் நேற்று இரவு பண்ணை வீட்டில் கூடி ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில் சசிகலா தரப்பின் ஆதரவும் இருந்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டாலும் முதல் நிலையை அவரால் இன்று வரை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இப்போதும் அவர் போடும் திட்டப்படி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரோடு இணைந்து புதிய முயற்சியை எடுத்தாலும் 2-ம் இடம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இந்த முகாமில் இப்படி நடக்க... எடப்பாடி பழனிசாமி முகாமிலும் சசிகலா, டி.டி.வி.தினகரனோடு சேர்ந்து வந்தால் அதையும் எதிர்கொள்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    Next Story
    ×