search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.நகர் பாண்டிபஜார் சாலைக்கு, தியாகராயர் சாலை என்று பெயர் பலகை வைப்பதா?- என்.ஆர்.தனபாலன் கண்டனம்
    X

    தி.நகர் பாண்டிபஜார் சாலைக்கு, தியாகராயர் சாலை என்று பெயர் பலகை வைப்பதா?- என்.ஆர்.தனபாலன் கண்டனம்

    • ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார்.
    • 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தி.நகர் பனகல் பூங்காவில் சென்னை வாழ் நாடார் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள பட்டி வீரன்பட்டி 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் திருவுருவ சிலையை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் மறைந்த அன்றைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14.4.1992-அன்று வைத்தார். சிலையை திறந்து வைத்த ஜெயலலிதா பாண்டிபஜார் சாலையின் பெயரை 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை என்றும், பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அங்காடி சாலை காவல் நிலையம்' என்றும் பெயர் வைத்து மறைந்த தலைவரின் புகழுக்கு பெருமை சேர்த்தார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலம் வரை அப்பெயரே நீடித்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் அங்காடி சாலை என்கிற பெயரை மாற்றி தியாகராயர் சாலை என்று பெயர் பலகை வைத்திருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரும், கொடைக்கானல் மலையில் காப்பி தோட்ட உரிமையளரும் பெரும் நிலக்கிழாரும், மெத்த படித்தவரும், சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளருமானவர் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் ஆவார். 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக நீதிக்கட்சி தலைவர் பி.டி.ராஜன் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக 2 ஆண்டுகளும், மதுரை ஜில்லா சபை தலைவராக 4 ஆண்டுகளும் பதவி வகித்தார். 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தலைமை தாங்கி மாநாட்டை வெற்றி மாநாடாக்கினார்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் ஏற்றம் பெறவும், தீண்டாமை ஒழியவும் பாடுபட்ட மாபெரும் தலைவரின் பெயரிலான பாண்டிபஜார் வீதிக்கு மீண்டும் அச்சம் அகற்றிய அண்ணல் 'டபிள்யூ.பி.ஏ. சவுந்தர பாண்டியனார் கடை வீதி' என்று பெயர் சூட்டி மறைந்த தலைவரின் மங்கா புகழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×