search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயில் பாதைக்காக 2-வது சுரங்கம் தோண்டும் ராட்சத எந்திரம் பரிசோதனை
    X

    மெட்ரோ ரெயில் பாதைக்காக 2-வது சுரங்கம் தோண்டும் ராட்சத எந்திரம் பரிசோதனை

    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன.
    • சுரங்க பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சத துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118. கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிங்கேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம்பெறுகின்றன. சுரங்க பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சத துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த துளையிடும் எந்திரங்கள் சீனா, ஜப்பானில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

    இதே போல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராட்சத எந்திரங்களும் சுரங்கப் பாதை தோண்ட பயன்படுத்தப்படுகிறது. சுரங்கப் பாதை துளையிடும் முதல் எந்திரம் சீனாவில் இருந்து கடந்த 3-ந்தேதி மாதவரம் பால் பண்ணை பகுதிக்கு வந்தது.

    இதற்கிடையே சுரங்கப்பாதை தோண்டும் 2-வது எந்திரத்தின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. பொன்னேரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இதற்கான சோதனை நடந்தது. இந்த ராட்சத எந்திரம் 6.6 மீட்டர் விட்டம் கொண்டது.

    இந்த 2-வது எந்திரம் கெல்லீஸ்-தரமணி இடையேயான சுரங்கப்பாதை தோண்ட பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதை 12 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சுரங்கப்பாதை தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கும்.

    இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 2025-26-க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×