search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு- போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு- போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    • சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் தொடர்ந்த வழக்கில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு.
    • விசாரணையை செப்டம்பர் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி. பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    அன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். அப்போது, அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

    கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனர்.

    நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Next Story
    ×