search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் மோடியின் கனவு பலிக்காது- கே.எஸ். அழகிரி
    X

    நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் மோடியின் கனவு பலிக்காது- கே.எஸ். அழகிரி

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது.
    • சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வன்முறை களமாக மாற்றியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

    உயர்ந்த சித்தாந்தம் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வருகிறது. தற்போதைய அரசியலுக்கு காந்தியும், காமராஜரும் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தால் இன்று 15 கோடி குடும்பங்கள் வாழ்வு பெற்றுள்ளன.

    ஆனால் இலவச திட்டங்கள் நாட்டுக்கு பெரும் ஆபத்து என பிரதமர் மோடி விமர்ச்சிக்கிறார். வெறுப்பு அரசியலை காங்கிரஸ் விரும்பவில்லை. ஜாதி மதம், மக்களை பிளவுபடுத்தும் என்பதாலேயே மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனால்தான் இந்தியா ஒற்றுமையாக உள்ளது.

    நாட்டின் ஒற்றுமைக்கு காரணமாக இருந்ததால்தான் காந்தியடிகள், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிய 3 தலைவர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்த தியாகத்தை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    நரேந்திர மோடி நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. சனாதானத்துக்கு எதிராக பேச காங்கிரஸ் கட்சிக்கு முழு உரிமை உள்ளது என்றார்.

    அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி ராணுவம் மற்றும் புலனாய்வு பின்புலம் கொண்டவர். எனவே தமிழ்நாடு போன்ற ஜனநாயக அரசு செயல்படும் மாநிலத்துக்கு அவர் ஏற்றவர் அல்ல. மாகாணங்களில் அவரை நியமிக்கலாம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்பதில் தவறில்லை. ஆனால் மாநில அரசின் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அவர் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். சுய மரியாதை அரசியல் நடைபெறும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கருத்துக்களை எளிதாக திணிக்க முடியாது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வன்முறை களமாக மாற்றியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×