search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுடன் தொழில் அதிபரை நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்
    X

    பெண்ணுடன் தொழில் அதிபரை நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

    • வீடியோவை காட்டி இதனை உங்கள் குடும்பத்தினருக்கும், வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.
    • தற்போது என்னிடம் பணம் இல்லை என தொழில் அதிபர் தெரிவித்தார்.

    கோவை, ஜூலை.13-

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது தொழில் அதிபர். கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அங்கு 2 பேரும் ஜாலியாக இருந்ததாக தெரிகிறது.

    அப்போது 3 பேர் கும்பல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் தொழில் அதிபரையும், அந்த பெண்ணையும் மிரட்டினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்தனர். மேலும் வீடியோவும் எடுத்தனர்.

    அந்த வீடியோவை காட்டி இதனை உங்கள் குடும்பத்தினருக்கும், வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர். தற்போது என்னிடம் பணம் இல்லை என தொழில் அதிபர் தெரிவித்தார்.

    உடனே அவர் கையில் இருந்த ரூ.1000 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக் கொண்ட அவர்கள் நாங்கள் கேட்கும்போது எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் வர வேண்டும் என கூறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    மிரட்டலுக்கு ஆளான தொழில் அதிபர் அருகில் உள்ள காந்திபுரம் காட்டூர் போலீஸ்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். நான் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறேன். ஓட்டலில் தங்கியிருந்த எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு பெண் வந்திருந்தார். அவரையும், என்னையும் ஒரு கும்பல் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்தனர். அதனை காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த கும்பலை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் பறித்துச் சென்ற எனது ஏ.டி.எம். கார்டையும் மீட்டுத்தர வேண்டும். எனது நிர்வாண படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபரை பற்றி நன்கு அறிந்த நபர்களே இந்த செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    தொழில் அதிபருடன் தங்கியிருந்த பெண் கூட அந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவராக இருக்கலாம். தொழில் அதிபரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அந்த பெண், சரியான நேரம் பார்த்து அந்த கும்பலை அங்கு வரவழைத்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதனால் தொழில் அதிபருடன் சென்ற பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணை பிடித்தால் உண்மை வெளியே வரும் என போலீசார் நம்புகிறார்கள். இதனால் அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் தொழில் அதிபர் தங்கியிருந்த ஓட்டலில் பதிவாகி உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது.

    மோசடி கும்பல் இதேபோல் பல தொழில்அதிபர்களை பெண்களுடன் இணைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து இருக்கலாம். ரேஸ்கோர்ஸ் தொழில் அதிபர், அச்சமின்றி போலீசுக்கு சென்றதால் இந்த பிரச்சினை வெளியே தெரிந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×