search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருளை ஒழிக்க போலீசாருக்கு சுதந்திரம் தேவை- எடப்பாடி பழனிசாமி
    X

    போதைப்பொருளை ஒழிக்க போலீசாருக்கு சுதந்திரம் தேவை- எடப்பாடி பழனிசாமி

    • தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்தேன்.
    • மழுப்பலான வார்த்தைகளைப் பேசி பிரச்சினையை திசை திருப்பிய முதல்-அமைச்சர் இன்றைக்கு, அவரே போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த அம்மாவின் ஆட்சியின்போது, தங்களுக்கு வேண்டியவர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்த குட்கா பாக்குப் பொட்டலங்களை சரங்களாக கழுத்தில் அணிந்து சட்டசபையில் நாடகம் ஆடிய தி.மு.க. அரசின் முதல்-அமைச்சருக்கு தற்போது தமிழகமே கஞ்சா காடாக, போதைப் பொருட்களின் விற்பனைக் கூடாரமாக மாறி இருப்பது தெரியவில்லையா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத்தில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக சுமார் 7,000 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும் அதில் சுமார் 9,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் இந்த அரசு கூறியபோது, இதில் எத்தனை பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்றும், எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது என்றும் நான் வினா எழுப்பினேன்.

    அது போலவே, சட்டமன்றத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக சுமார் 2,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 150 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறியபோது, ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற வினாவையும் சட்டமன்றத்தில் நான் எழுப்பினேன்.

    ஆனால், இதுவரை எனது இரண்டு வினாக்களுக்கும் முழுமையான பதில் வரவில்லை. இப்புள்ளி விவரம் இந்த ஆண்டு மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 14 மாதங்களில் நிர்வாகத் திறமையின்மையாலும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்தேன். அப்போதெல்லாம் மழுப்பலான வார்த்தைகளைப் பேசி பிரச்சினையை திசை திருப்பிய முதல்-அமைச்சர் இன்றைக்கு, அவரே போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

    மேலும் நான் 'சாப்ட்' முதல்-அமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×