என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உள்ளம் நல்லாருந்தா...ஊனம் ஒரு தடையல்ல... ஓவியத்தில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல் வளர்ச்சி தடைபட்டு, 10 வயது குழந்தை போல் காட்சி அளிக்கின்றனர்.
  • இயற்கை உபாதை கழிக்க கூட, மற்றவர் உதவி தேவைப்படுகிறது.

  தமிழ் திரை உலகில் சுசீலா பாடலில் சாதித்தார். அதேபோல் ஓவியத்தில் கலக்குகிறார் தெசவிளக்கு சுசீலா.... சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ளது தெசவிளக்கு கிராமம். இங்குள்ள மாட்டையாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி-சின்னப்பொண்ணு தம்பதியரின் 2-வது மகள்தான் சுசீலா. 26 வயதான இவரும் இவரது அக்காள் மலர்விழியும், தம்பி சக்தியும் 3 அடி உயரமே கொண்ட மாற்றுத்திறனாளிகள். இவர்கள் 8 வயது வரை ஆரோக்கியத்துடன் இருந்தனர். 9-ம் வயது, முதல் தலையில் உள்ள முடி கொட்டியது. கால்சியம் சத்து குறைபாட்டால் நடக்க முடியாமல் தவித்தனர்.

  அவர்களை அருகில் உள்ள அரசுப்பள்ளியில், பெற்றோர் படிக்க வைத்தனர். மேல்நிலைப்பள்ளி, சற்று தொலைவில் இருந்ததால் தொடர்ந்து படிக்கவில்லை. இவர்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு நரம்பு நோய் மற்றும் ஜீரணக்கோளாறு போன்றவை உள்ளது.

  உடல் வளர்ச்சி தடைபட்டு, 10 வயது குழந்தை போல் காட்சி அளிக்கின்றனர். இயற்கை உபாதை கழிக்க கூட, மற்றவர் உதவி தேவைப்படுகிறது. தறித்தொழில் செய்யும் பெற்றோர் வறுமையிலும் இவர்களது மருத்துவ செலவுக்கு இதுவரை பல லட்சம் ரூபாய் செலவு செய்து, கடனாளியாக உள்ளனர்.

  ஆர்த்தியோ ஜெனசிஸ் இம்பர்பெக்டர் என்ற ஒரு வகை எலும்பு நோயினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எலும்பின் உறுதி தன்மை குறைவதால், இவர்கள் நடக்க இயலாது. மேலும், மூளை சம்பந்தமான நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தலையில் முடி கொட்டி அடிக்கடி ஜன்னி வருகிறது.

  தொடக்கத்தில் இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அடிக்கடி செல்லவும், தங்கவும் ஆகும் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் அங்கு செல்லும் முடிவை கைவிட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சக்தி இறந்து விட்டார். கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் உதவி தொகை வழங்க உத்தரவிட்டார். அது போதாததால், மருந்து வாங்க கூட பெற்றோர் தவித்து வருகின்றனர்.

  7 ஆண்டுகளுக்கு முன், தாரமங்கலத்தில் உள்ள ஒரு உடல் ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்க பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் அவர்களை பிரிந்து இருக்க முடியாது என அழுததால், பின்பு வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டனர்.

  இதில் சுசிலாவால் எழுந்து நடக்க இயலாது. அமர்ந்தபடியே தனக்கான பணிகளை மேற்கொள்கிறார். ஆனால் மனம் தளராத சுசிலா தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். தனக்கு பிடித்தவற்றை ஓவியமாக வரைய ஆரம்பித்தார். நாளடைவில் ஓவியத்தில் தனித்திறமையை வளர்த்துக்கொண்டார்.

  எப்படிப்பட்ட ஓவியத்தையும் அரை மணிநேரத்தில் அட்டகாசமாக வரையும் சுசிலாவின் திறமையை வெளி உலகுக்கு கொண்டு வர அவரது பெற்றோர் திட்டமிட்டனர். சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெற்ற ஓவிய கண்காட்சிகளில் சுசிலாவின் ஓவியத்தை காட்சிப்படுத்தினர். சுசிலாவின் ஓவியத்துக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தன. இன்றும் தெசவிளக்கு சுசீலா ஓவியம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சுசிலா வரைந்து காட்சிப்படுத்தியுள்ள ஓவியங்கள் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

  சுசீலா தான் வரைந்த ஓவியங்களை புத்தக வடிவில் கோர்த்து பாதுகாத்து வருகிறார். வீட்டில் போதிய வசதி இல்லாததால் பக்கத்து வீட்டிலும் ஓவியங்களை அடுக்கி வைத்துள்ளார். வறுமையில் வாடும் சுசீலாவின் பெற்றோரால் அவரது திறமையை முழுமையாக வெளி உலகுக்கு கொண்டு வர முடியவில்லை.

  இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் கந்தசாமி, சின்னப்பொண்ணு கூறியதாவது:-

  புதுமையான நோயால் பாதிக்கப்பட்ட எங்களது 2 மகள்களையும் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறோம். தறித்தொழில் செய்து பிழைப்பு நடத்திவரும் எங்களுக்கு இவர்களது மருத்துவ செலவுக்கு கூட போதிய பணம் இல்லாமல் அவதிப்படுகிறோம். எனது இளைய மகள் சுசீலா அற்புதமான ஓவியங்களை வரைந்து வருகிறார். சிறுவயதிலேயே அவரது ஆர்வத்தை பார்த்து ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். தற்போது 250-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். அவரது திறமையை ஊக்குவிக்கவும், எங்களது மகள்களின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளியில் சுசீலாவுக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கவேண்டும். சமூக அமைப்புகளும் எங்களுக்கு உதவி செய்யவேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  இன்றைய கால சூழலில் என்னடா வாழ்க்கை இது என அலுத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் ஓவியத்தில் சாதித்துவரும் சுசீலாவும், வறுமை நிலையிலும் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் கந்தசாமி-சின்னப் பொண்ணு தம்பதியரும் தன்னம்பிக்கை, தளரா முயற்சியுடன் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

  Next Story
  ×