search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு பருவமழை தாமதம்- கரைபுரண்டு ஓடிய வைகை வறண்டு கிடப்பதால் வேதனை
    X
    தென்மேற்கு பருவமழை தாமதத்தால் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு வறண்டு கிடக்கும் காட்சி.

    தென்மேற்கு பருவமழை தாமதம்- கரைபுரண்டு ஓடிய வைகை வறண்டு கிடப்பதால் வேதனை

    • வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • கடந்த வருடம் இதே நாளில் கரை புரண்டு ஓடிய வைகை ஆறு தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது.

    கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக, வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    வைகை ஆறு வற்றினாலும், உறை கிணறுகளில் உள்ள நீரை வைத்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போதுஅதிக வெயில் காரணமாக உறை கிணறுகளில் உள்ள நீரின் மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளிமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்படும். ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு அதனை தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வருடம் இதே நாளில் கரை புரண்டு ஓடிய வைகை ஆறு தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    வைகை அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 58.61 அடியாக உள்ளது. வரத்து இல்லை. பாசனத்துக்கு 800 மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 என மொத்தம் 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3346 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 133.25 அடியாக உள்ளது. வரத்து 136 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 4990 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 41.80 அடி. வரத்து 16 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 83.31 அடி. திறப்பு 3 கன அடி.

    Next Story
    ×