search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த ஒப்பந்தக்காரர் கைது
    X

    நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த ஒப்பந்தக்காரர் கைது

    • கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நாராயண பெருமாள் அவரது மகள் மற்றும் மனைவி கேட்டுள்ளனர். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இதுவரை கொடுக்கவில்லை.
    • இது குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள முகிலன்விலையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது 62), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

    இவருக்கும், பார்வதிபுரம் ஜெ.கே.நகர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா (37) இருவரும் நாராயணபெருமாளிடம் அவரது மகளின் கணவருக்கு மின்சார வாரியத்தில் இளநிலை மின் பொறியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளனர்.

    இதையடுத்து ஜெயக்குமாரின் மனைவி சுனிதாவின் வங்கி கணக்கில் நாராயண பெருமாள் முதலில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும், அதன்பின்னர் ரொக்கமாக ரூ.5 லட்சமும் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பின்னர் ஜெயக்குமாரும் அவரது மனைவியும் வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நாராயண பெருமாள் அவரது மகள் மற்றும் மனைவி கேட்டுள்ளனர். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இதுவரை கொடுக்கவில்லை.

    இது குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அவர் புகார் குறித்து விசாரிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவுக்கு உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சுசீந்திரம் போலீஸ் (பொறுப்பு )இன்ஸ்பெக்டர் காந்திமதி சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் ஆகியோர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஆரல்வாய்மொழி பகுதியில் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் பதுங்கியிருப்பதாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயக்குமாரை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் மீது சென்னை ஆவடி காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி, செக் மோசடி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×