search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் மற்றும் பணிகளை சிறு சிறு பகுதிகளாக டெண்டர் விட வேண்டும்- ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை
    X

    கால்வாய் மற்றும் பணிகளை சிறு சிறு பகுதிகளாக டெண்டர் விட வேண்டும்- ஒப்பந்ததாரர்கள் சங்கம் கோரிக்கை

    • பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொள்வதால் பணிகள் சரிவர நடைபெறாமல் மந்தமான நிலையில் உள்ளது.
    • மழைநீர் வடிகால்வாய்க்காக தோண்டப்படும் மண் அப்புறப்படுத்தப்படாமல் சாலைகளில் ஆங்காங்கே கொட்டி வைப்பதால் போக்குவரத்தும், பொது மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 24-7-2022 அன்று பி.ஆர்.ஆர். துறையில் ரோடு கட் பணிகள் குறித்து, குறைந்த பட்ச தொகை 11.45 லட்சம் முதல், அதிகபட்ச தொகை 19.02 லட்சத்தில், 7 தனித்தனி பணிகளுக்காக 24-07-2022 அன்று ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டு 27-07-2022-ல் பிற்பகல் 3 மணி அளவில் கடைசி நேரமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வசதி படைத்த ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக, அவர்கள் நடத்தி வரும் சங்கத்தினரின் தூண்டுதலில் பேரில், அறிவிக்கப்பட்ட ஒப்பந்தகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

    இதனால், சிறு ஒப்பந்ததாரர்கள் மிகவும் பாதிப்பு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அறிவிக்கப்பட்ட வலைத்தள ஒப்பந்தத்தில் பி.ஒ.கியூ அயிட்டம் வாரியாக முறையாக அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்ட தோராயமாக அவர்களாகவே ஒரு முறையற்ற, தெளிவில்லாத தொகையும் அதற்குண்டான ஜி.எஸ்.டி.யும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஏற்கனவே செயல் காட்டில் இருந்து வந்த ஒப்பந்ததாரர்களின் தகுதிக்கான இயந்திரங்களின் பயன்பாட்டின் நடைமுறையை மாற்றி, குறைந்தபட்ச ஒப்பந்த தொகை 10 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தங்களில் கூட பேக்கேஜ் ஒப்பந்ததாரர்களின் தலையீட்டால், ஒரு சில அரசு அதிகாரிகள் ஏற்கனவே இருந்து வரும் ஒப்பந்த நடைமுறையை மாற்றி வருகின்றனர். மேலும் 4-8-2022 அன்று கடைசி தேதியாக மறு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒப்பந்த தகுதிக்கான இயந்திரங்களின் நடைமுறையை அமல்படுத்தி, சிறு ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் ஒப்பந்தங்கள் அறிவிக்கபட வேண்டும் என்பது அனைத்து ஒப்பந்ததாரர்களின் மன நிலை ஆகும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் பேக்கேஜ் முறையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதால் மேற்கண்ட ஒப்பந்த பணிகள் குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்த முடியாமலும், பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். ஆகவே அறிவிக்கப்படும் ஒப்பந்த பணிகள், சிறு சிறு தொகைக்கான ஒப்பந்தங்களாக அறிவிக்கப்பட்டால் ஒப்பந்த பணிகள் வேகமாகவும், பொதுமக்கள் பயன் அடையும் வகையிலும் அமையும்.

    மேலும் பேக்கேஜ் முறையில் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதால் வசதி படைத்த பெரிய செல்வந்தர்கள் மட்டும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனால் சிறு ஒப்பந்ததாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே சிறு ஒப்பந்ததாரர்களும் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஆகவே பேக்கேஜ் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

    மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் 5 கோடி ரூபாய் முதல் அதிகபட்சமாக 52 கோடி ரூபாய்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் பேக்கேஜ் முறையை முழுமையாக ரத்து செய்து சிறு ஒப்பந்ததாரர்களும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது அனைத்து ஒப்பந்ததாரர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

    இதுசம்பந்தமாக ஒப்பந்ததாரர்கள் தகுதிக்கான பயன்படுத்திவரும் எந்திரங்கள், உரிமையாளர், லீஸ், வாடகை போன்ற ஏற்கனவே (நடைமுறையில்) இருந்துவரும் நடைமுறையை அமல்படுத்தி ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தங்களில் கலந்து கொள்வதற்கு தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். பணிகளுக்கு பயன்படும் பொருட்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்பட்டு டெண்டர் விட வேண்டும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொள்வதால் பணிகள் சரிவர நடைபெறாமல் மந்தமான நிலையில் உள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாய்க்காக தோண்டப்படும் மண் அப்புறப்படுத்தப்படாமல் சாலைகளில் ஆங்காங்கே கொட்டி வைப்பதால் போக்குவரத்தும், பொது மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இதற்கு சான்றாக சென்னை மாநகராட்சி (கோடம்பாக்கம்) 10-வது மண்டல அலுவலகம் எதிரிலும், (ஆற்காடு சாலை), எம்.ஜி.ஆர்.நகர், அண்ணா பிரதான சாலை ஆகிய இடங்களில் தோண்டப்படும் மண் அப்புறப்படுத்தப்படாமல் ஆங்காங்கே கொட்டப்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒப்பந்ததாரர்களால் தடுப்பு அரண்முறையாக அமைக்கப்படவில்லை. வீட்டிற்குமுன் தோண்டப்படும் மழைநீர் கால்வாயை கடந்து செல்வதற்கு பொதுமக்களுக்கு கைப்பிடியுடன் கொண்ட நடைபாதை அமைக்கப்படவில்லை.

    மேற்கண்ட பணிகளுக்கான தொகையை அரசு ஒதுக்கி கொடுத்தும் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதுபற்றி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 2 மாதத்திற்கு முன்பு சிறிய பணிகளுக்கு மைனஸ் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சமீபத்தில் பெரிய வேலைகளுக்கு 17 சதவீத பிளஸ் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×