search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் குர்பானி கொடுக்க ஆடுகள் விற்பனை மும்முரம்
    X

    சென்னையில் 'குர்பானி' கொடுக்க ஆடுகள் விற்பனை மும்முரம்

    • பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது.
    • குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனர்.

    அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு அல்லது ஒட்டக இறைச்சியை வாங்கியோ அல்லது உயிருடன் வாங்கி கூறுபோட்டு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு பிரித்து கொடுப்பார்கள்.

    இதனால் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாகவே ஆடு விற்பனை களை கட்ட தொடங்கி விடும். சென்னையில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அம்பத்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள இறைச்சி கூடங்களில் குர்பானி ஆடு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    நேற்று முதல் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். சென்னையில் சுமார் 50 ஆயிரம் ஆடுகள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் 20 ஆயிரம் ஆடுகள் விற்பதற்கு தயாராக உள்ளன.

    இதுகுறித்து ஆட்டிறைச்சி வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஸ்ரீராமலு கூறியதாவது:-

    குர்பானி ஆடு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. குறைவாகத்தான் விற்பனை நடக்கிறது. பக்ரீத்துக்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே ஆடுகளை வாங்கி செல்வார்கள். 15 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் கிலோ ரூ.650 வீதமும், கறியாக கிலோ ரூ.600 வீதமும் விற்பனை செய்கிறோம்.

    ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் வருவதால் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டும். இந்த வாரம் கூடுதலாக விற்பனையாகும் என்பதால் ஆடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் குர்பானி ஆடுகள் விற்பனை இப்போதே மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் ஒட்டக இறைச்சியும் விற்கப்படுகிறது.

    மாடுகளும் அதிகளவு வெட்டுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாட்டு இறைச்சி கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதால் மாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கும் மாட்டு இறைச்சி விற்பனை அமோக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு மாடுகளை கொண்டு வந்துள்ளனர்.

    பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று அசைவ ஓட்டல்களில் பிரியாணி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதே அசைவ ஓட்டல்களில் ஆர்டர்கள் குவிகிறது. குடும்பமாக சாப்பிட பக்கெட் பிரியாணி, தந்தூரி, கிரில் போன்ற கோழி வகை உணவுகளும் அதிகளவு தயாரிக்க முன்னணி ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் உணவு அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பிரியாணி விற்பனை குறிப்பிடும் வகையில் உள்ளது.

    Next Story
    ×