search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமர்நாத்தில் நிலச்சரிவு- கனமழையில் சிக்கிய தமிழக பக்தர்கள் 25 பேர் இன்று சென்னை திரும்பினர்
    X

    அமர்நாத்தில் நிலச்சரிவு- கனமழையில் சிக்கிய தமிழக பக்தர்கள் 25 பேர் இன்று சென்னை திரும்பினர்

    • தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று இருந்தனர்.
    • நிலச்சரிவு மற்றும் கன மழையில் சிக்கி இருந்த அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    அமர்நாத் குகை கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. இந்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அமர்நாத் யாத்திரைக்காக மலை அடிவாரத்தில் கூடாரங்களில் தங்கி இருந்த ஏராளமான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்தவர்களையும், வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்களையும் கொண்டு வர இலகுரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 16 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். அங்கு சிக்கி இருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்று இருந்தனர். நிலச்சரிவு மற்றும் கன மழையில் சிக்கி இருந்த அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 பெண்கள் உள்பட 25 பக்தர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். அவர்கள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 4-ந்தேதி அமர்நாத் சென்றோம். அப்போது அங்கு நல்ல சீதோஷ்ண நிலை இருந்தது. பின்னர் அமர்நாத்துக்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதிக்கு சென்றோம். அன்று இரவு கூடாரத்தில் தங்கியிருந்தோம். 5-ந்தேதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு கீழே இறங்கும்போதே மழை பெய்ய தொடங்கி விட்டது.

    உடனடியாக அமர்நாத்தில் இருந்து கீழே இறங்குவதையும் அமர்நாத்துக்கு மேலே ஏறுவதையும் தடை செய்து விட்டனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு தவித்துக் கொண்டு இருந்தோம்.

    அங்குள்ள மக்களிடம் மழை எப்போது ஓயும்? எங்களை எப்போது கீழே இறங்க விடுவார்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் 4 நாட்கள் கூட ஆகலாம். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர். 4 மணி நேரத்தில் மழை ஓய்ந்து, வெயில் அடித்ததால் எங்களை கீழே இறங்க அனுமதித்தனர். நாங்களும் அவசரமாக கீழே இறங்கி பஞ்சதரணி வந்தோம்.அங்கிருந்து ஹெலிகாப்டரில் நீல்கிரித் வந்து, நாங்கள் இறையருளால் தப்பித்து வந்து விட்டோம்.

    ஆனால் மீண்டும் 6,7-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுவதுமே கனமழையில், மண் சரிவு அடித்து செல்லப்பட்டது என்பதை அறிந்தபோது நாங்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்தோம். 2 மணி நேரத்தில் 31 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. எங்களை இறைவன் தான் காப்பாற்றி இருக்கிறார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அரசு அதிகாரிகளும் பெரிதும் உதவினர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×