search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. தொண்டர்களை எந்த கட்சியும் அபகரிக்க முடியாது- செல்லூர் ராஜூ பேட்டி
    X

    அ.தி.மு.க. தொண்டர்களை எந்த கட்சியும் அபகரிக்க முடியாது- செல்லூர் ராஜூ பேட்டி

    • தமிழகத்தில் தி.மு.க.வை ஒழிக்க அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. இது எம்.ஜி.ஆரின் வாக்கு.
    • அ.தி.மு.க. இயக்கம் மக்களுக்காக தொடங்கப்பட்டது. மக்களால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வின் கொள்கைகளை, சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர் எம்.ஜி.ஆர். ஆனால் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் தியாகத்தை மதிக்காமல் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார்.

    அண்ணா தொடங்கிய தி.மு.க.விற்கு எதிராக கட்சியை தொடங்க எம்.ஜி.ஆர். அன்றைக்கு தயாராக இல்லை. அண்ணாவின் இயக்கத்திற்கு எதிராக ஒரு கட்சியை தொடங்குவதா? என்று யோசித்தார். ஆனால் மக்கள் கொந்தளித்தார்கள்‌.

    கருணாநிதி அன்றைக்கு கோட்டைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அமைச்சர்கள், தி.மு.க.வினர் தி.மு.க. கரை வேட்டியை கட்ட முடியாத வகையில் மக்கள் வெகுண்டெழுந்தார்கள்.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இயக்கத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். தான் நேசித்த அண்ணாவின் படத்தை கொடியிலும், அண்ணாவின் பெயரை கட்சியிலும் தாங்கி இந்த இயக்கத்தை தொடங்கினார்.

    இது மக்கள் இயக்கம். தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க.

    இந்த இயக்கத்தை சிலர் அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது. எம்.ஜி.ஆர். பேச முடியாத நிலையில் கூட கடந்த 1984, 1986 ஆகிய ஆண்டுகளில் உயில் எழுதி உள்ளார். அந்த உயிலில் 80 சதவீத தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள்தான் இந்த இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கமாக என்றைக்கும் இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள சில சலசலப்புகள் விரைவில் சரியாகிவிடும்.

    தமிழகத்தில் தி.மு.க.வை ஒழிக்க அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. இது எம்.ஜி.ஆரின் வாக்கு. அதுபோல இன்னும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் மக்களுக்கு பணியாற்றும் என்பது அம்மாவின் லட்சியமாகும்‌. இந்த லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். பதவிக்காக சிலர் போகலாம். எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பாசம் கொண்ட எந்த தொண்டனும் வேறு கட்சிக்கு போகமாட்டான். தேசியக் கட்சியோ, மாநில கட்சியோ அ.தி.மு.க. தொண்டர்களை தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம். அது அவர்களது பகல் கனவாகவே முடியும்.

    அ.தி.மு.க. இயக்கம் மக்களுக்காக தொடங்கப்பட்டது. மக்களால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தொண்டர்கள் விரும்புகின்ற தலைமை நிச்சயம் வரும். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். அ.தி.மு.க.விற்கு ஜாதி, மதம் என்று எவ்வித பாகுபாடும் இல்லை. ஒரு நாயர் (எம்.ஜி.ஆர்.) தலைவராக கொண்டது அ.தி.மு.க., ஒரு பிராமணப் பெண்ணை (ஜெயலலிதா) தலைவராகக்கொண்டு பீடுநடை போட்டது அ.தி.மு.க.

    69 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது ஒரு பிராமணப் பெண்தான். இந்த இயக்கம் தமிழக மக்களுக்காக என்றென்றும் தொடர்ந்து பாடுபடும். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் சிலரின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.ஜி.ஆரை பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுத்த நிலையில் காணப்பட்டார்.

    Next Story
    ×