என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசின் சாதனை மலரை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட காட்சி.
அரசின் சாதனை மலர்
- அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்
- மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி '' என்ற ராணிப்பேட்டை மாவட்ட ஈராண்டு சாதனை மலர் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாதனை மலர் கையேட்டினை வெளியிட்டார்.
795 பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்கள் உள்பட ரூ.4 கோடியே 50 லட்சத்து 73 ஆயிரத்து 527 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்த 2 ஆண்டு சாதனை 200 ஆண்டு சாதனை போன்றுள்ளது.
தற்போதைய மக்களாட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. முன்பெல்லாம் அரசைத் தேடி மக்கள் உதவிகளை பெறுவதற்காக செல்வார்கள்.
ஆனால் தற்போதைய ஆட்சியில் அரசானது மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறது.
அனைத்து அரசு அலுவலர்களும் இரவு பகல் பாராமல் மக்கள் நலனுக்காக செயல்படும் வகையில் முதல் அமைச்சர் அரசுத் துறை அலுவலர்களை வழிநடத்திச் செல்கிறார்.
மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, துணைத் தலைவர் நாகராஜு , வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா உள்பட ஒன்றிய குழு, நகர மன்ற, பேரூராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் தொகுத்து வழங்கினார்.






