search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சாந்தி நகர் பகுதி பொதுமக்கள் மேயரிடம் மனு
    X

    வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் பொதுமக்கள் மனு வழங்கிய காட்சி.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சாந்தி நகர் பகுதி பொதுமக்கள் மேயரிடம் மனு

    • கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கடந்த ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கப்படுவதில்லை என மனுவில் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாளை சாந்தி நகர் பொதுநல அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தங்கையா மற்றும் 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பவுல்ராஜ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மேயரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாந்தி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு கடந்த ஆண்டு வரை குடிநீர் விநியோகம் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது . ஆனால் கடந்த ஒரு வருடமாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கப்படுவதில்லை. எனவே உடனடியாக பழையபடி சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாந்தி நகர் 24, 25, 26, 29-வது குறுக்குத் தெருக்களில் பழுதான சாலைகளை சரி செய்வதற்காக சாலை முழுவதும் ஜல்லியை நிரப்பி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இதுவரை சாலை போடப்படவில்லை. இதேபோல் சாந்தி நகர் 6-வது பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் போது விநாயகர் கோவில் அருகில் இருந்த வேகத்தடையை அகற்றி விட்டனர்.

    அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உடனடியாக அதனை மீண்டும் அமைத்து தர வேண்டும். இதே போல் சாந்தி நகர் 30-வது தெருவில் மேற்கு பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாளை மண்டலம் 5, 6 மற்றும் 7- வது வார்டுகளில் உள்ள பிரதான சாலைகள் 50 அடி அகலம் கொண்ட சாலைகளாகும். தூத்துக்குடி மற்றும் சீவலப்பேரி சாலைகளை இணைக்க கூடிய இந்த சாலைகளில் பெரிய அளவிலான எல்.இ.டி. விளக்குகள் அமைத்துள்ளனர். அதே போல் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலைகளிலும் பெரிய எல்.இ.டி. விளக்குகள் அமைக்க வேண்டும்.

    மேலும் சாந்தி நகர் மணிக்கூண்டு பகுதியில் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது அவர்களுடன் சங்கத்தின் செயலாளர் அசுவதி, பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் அசரப் அலி, அலெக்சாண்டர், பாலசுப்ர மணியன், அப்பாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எஸ் என் ஹைரோடு வியாபாரிகள்

    சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சிலுவைப் பிச்சை தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினர் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டு கணக்கில் பாதாள சாக்கடை திட்டத்தின் காரணமாக பாதிப்படைந்து கிடக்கும் தச்சநல்லூர் ஊருடையார்புரம் சாலை பணியை தீவிரப்படுத்த வேண்டும். சமீபத்தில் மேயர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த சாலையில் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சாலை பணியை முழுவதுமாக முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    டவுன் பூதத்தார் மூக்கு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், டவுன் கீழரத வீதி மார்க்கெட் பகுதியில் பூதத்தார் சன்னதி தெருவில் 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடம் தற்போது சேதம் அடைந்து கிடக்கிறது. அதனை உடனடியாக சீரமைத்து அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என கூறியிருந்தனர்.

    Next Story
    ×