search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்-  உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
    X

    மு.க.ஸ்டாலின் 

    சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்- உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    • மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன்.
    • மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது.

    பொம்மகுட்டை:

    நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது.

    மிசா காலத்தில் அரசியலே வேண்டாம் என்று சிலர் எழுதி கொடுத்தபோது, நான் அப்படி எழுதிதர மறுத்தேன். மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன்.

    மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மக்களுக்கு தொண்டாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளது, பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல.

    உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களின் உயிர்நாடி, நானும் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றி உள்ளேன். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் சேவையாற்ற வேண்டும், உங்களின் ஒரு கையெழுத்து மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

    அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் நாமக்கல், கல்வியிலும் தலைசிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டம். தற்போது நாமக்கல் திமுகவின் கோட்டையாக மாறி உள்ளது.

    உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி, மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சிரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும்.

    ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால், நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை , உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைவர்க்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×