search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இன்று பலத்த கட்டுப்பாடுகளுடன் 11 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது

    • நெல்லையில் 11, தென்காசி மாவட்டத்தில் 1 என மொத்தம் 12 மையங்களில் இன்று நடைபெறும் இந்த தேர்வை எழுத 6,730 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
    • மதியம் 1.30 மணி வரை வந்த மாணவ மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவ மாணவிகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.

    நெல்லை

    தமிழகத்திலும் இந்த தேர்வுக்கு ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். நெல்லையில் 11, தென்காசி மாவட்டத்தில் 1 என மொத்தம் 12 மையங்களில் இன்று நடைபெறும் இந்த தேர்வை எழுத 6,730 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

    இதையடுத்து அனைத்து தேர்வு மையங்களும் நேற்று கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு தேர்வர்களுக்குமான பதிவெண்கள் ஒட்டும் பணியும் முடிவடைந்தது.

    வழிகாட்டு நெறிமுறைகள்

    இன்று காலை 11.40 மணி முதல் மாணவ மாணவிகள் தேர்வறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1.30 மணி வரை வந்த மாணவ மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இதனை ஒட்டி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன.

    முக கவசம்

    முக கவசம் அணிந்து வந்த தேர்வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி மூலம் அவர்கள் கைகளை சுத்தப்படுத்திவிட்டு அதன் பின்னர் உள்ளே சென்றனர். ஏற்கனவே மாணவ- மாணவிகள் மூக்குத்தி, கம்மல், பெல்ட், கை கடிகாரம் உள்ளிட்டவை அணிந்து உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் அவற்றை கழட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் பெரும்பாலான மாணவ மாணவிகள் வரும்போது அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு உள்ளே வந்தனர்.

    போக்குவரத்து நெரிசல்

    தேர்வை ஒட்டி மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்ததால் பெரும்பாலான தேர்வு மையங்கள் முன்பு சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பயோ மெட்ரிக் பதிவு

    தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவ மாணவிகளின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பெண்கள் தலையில் கிளிப் உள்ளிட்டவை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை ஒட்டி கண்காணிப்பு பணியில் 14 அப்சர்வர்கள், 12 தலைமை கண்காணிப்பாளர்கள், 24 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×