search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க தயாராகும் 1 லட்சத்து 8 வடைகள்

    • ஒரே கல்லால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
    • மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    ஜெயந்தி விழா

    அதன்படி இந்த ஆண்டு வரும் 23-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. காலை 11 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய் தூள், 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்பட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்படும்.

    வடை தயாரிக்கும் பணி தொடக்கம்

    ஆஞ்சநேயருக்கு சாத்துவதற்காக 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று தொடங்கியது. அதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ஸ்ரீரங்கம் மடப்பள்ளி ரமேஷ் கூறியதாவது:-

    ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து 8 வடை தயாரிப்பதற்கு 2020 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 32 கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பொருட்களை சுத்தம் செய்து வடை செய்யும் பணி 24 மணி நேரம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 22-ந் தேதி காலை 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் 23-ந் தேதி சுவாமிக்கு வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×