search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது.

    இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 23-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 46 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 51 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 27 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் பெரும் பகுதி அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போதும் 120.11 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

    இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். மேலும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட உள்ளது . இதனால் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×