search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம்
    X

    கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம்

    • கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் 10 நாட்கள் தங்கியிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ரூ. 8 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 623 மதிப்புள்ள வங்கி கணக்கு மற்றும் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    மேலும் 136 வழக்குகளில் தொடர்புடைய 296 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.37 லட்சத்து 62 ஆயிரத்து 531 முடக்கப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் மீண்டும் ஈடுபட்ட 22 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேரின் பிணை ஆணையை ரத்து செய்து மீண்டும் அவர்களை ஜெயிலில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 225 பேரிடம் 'மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபட மாட்டோம்' என்று பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்துராமன் ஆகியோரின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, அவர்களை மேலும் 10 மாதம் ஜெயிலில் அடைக்க உத்தரவி டப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு மண்டல அளவிலான குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அவை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள ஒரு கிட்டங்கியில் வருகிற 17-ந் தேதி அழிக்கப்பட உள்ளது.

    மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கஞ்சா விற்பனை செய்த கோவிலாங்குளம் முத்து (47) என்பவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 393 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    ஒத்தக்கடையில் கஞ்சா வழக்கில் பிரகாஷ், நிஷந்தன், குணசேகரன் மற்றும் அவர்களின் உறவி னர்களின் ரூ.55 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள், 5 வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கஞ்சா கடத்தல்காரர்கள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் சொத்துக்க ளும் சட்டப்படி முடக்கப்ப டும். கஞ்சா விற்பனை செய்யும் சிறுவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூட அளவில் போதை பொருள் விழிப்புணர்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கொரியர் மற்றும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வெளியூர் போக்குவரத்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேரையூரில் 24 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்க ளுக்கு கஞ்சா சப்ளை செய்த சென்னை வாலிபரை தேடி வருகிறோம்.

    மேலூரில் 95 பவுன் நகை கொள்ளை வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டு உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை, மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    அங்கு தனிப்படை போலீ சார் 10 நாட்கள் தங்கி யிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்படவில்லை. இது தவிர மேலும் 4 பேரை பிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக தனிப்படை போலீசார் மீண்டும் மத்திய பிரதேசம் செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×