search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவது தொடர்பாக ஆய்வு
    X

    தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவது தொடர்பாக ஆய்வு

    • தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.
    • நீர்வளத்துறை குழுவினர் மேற்கொண்டனர்

    கரூர்:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் அதிகளவில் நீர் திறப்பால் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் ஆற்றங்கரையோரப் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு, வெள்ளநீர் புகாத வகையில் இப்பகுதியில் ரூ.20 கோடியில் வெள்ளத்தடுப்புச்சுவர் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நீர்வளத்துறை கரூர் மாவட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் திருச்சி நடு காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சாரா உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    156 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரம் கொண்ட தடுப்புச்சுவர் அமைக்கப்படும். அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், திட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்த பின் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×